விழுப்புரத்தில் பரபரப்பு: தி.மு.க.- அ.தி.மு.க.வினரிடையே மோதல் கள்ள ஓட்டு போட்டதாகவும் குற்றச்சாட்டு
விழுப்புரத்தில் தி.மு.க.- அ.தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சி 18-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடியில் தி.மு.க.வினர் சிலர் உள்ளே சென்று வாக்களிக்க வந்த வாக்காளர்களிடம் தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி பிரசாரம் செய்தனர். இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் இதுபற்றி அங்கிருந்த போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் புகார் கூறினர். ஆனால் போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர், தி.மு.க.வினரை அங்கிருந்து வெளியே செல்லுமாறு கூறி அவர்களிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர்.
இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாகி மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதோடு கையாலும் தாக்கிக்கொண்டனர்.
பேச்சுவார்த்தை
பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் அங்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டதாகவும், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபனிடம் அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர்.
அதற்கு இதுபற்றி விசாரிப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார். அதன் பிறகு அங்கிருந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.
மேலும் இந்த சம்பவத்தினால் அங்கு பதற்றமான சூழ்நிலை நீடித்ததால் அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story