கிருஷ்ணகிரியில், கள்ள ஓட்டு புகாரால் பரபரப்பு: அ.தி.மு.க.வினர் போலீசாருடன் வாக்குவாதம்
கிருஷ்ணகிரியில் சிலர் கள்ள ஓட்டு போடுவதாக புகார் கூறிய அ.தி.மு.க.வினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் சிலர் கள்ள ஓட்டு போடுவதாக புகார் கூறிய அ.தி.மு.க.வினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கள்ள ஓட்டு புகார்
கிருஷ்ணகிரி நகராட்சி 33 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் 1 மற்றும் 2-வது வார்டுக்கு கிருஷ்ணகிரி நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 1-வது வார்டில் 1,950 ஓட்டுகளும், 2-வது வார்டில் 2,652 ஓட்டுகளும் உள்ளன. வார்டு மறுவரையறை செய்யப்பட்டபின், 3-வது வார்டின் 1,300 பேரை, 2-வது வார்டில் சேர்த்ததால் வாக்காளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டதாக அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் 2-வது வார்டில் ஓட்டளிக்க சென்ற இருவரின் ஓட்டுகள் ஏற்கனவே போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும், கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் நேரில் வந்து விசாரித்தார். அவரிடம் அந்த கட்சியினர், பெண்கள் சிலர் கள்ள ஓட்டு போடுவதாகவும், ஓட்டுச்சாவடி பக்கவாட்டு பகுதி வழியாக சென்று மீண்டும், மீண்டும் ஓட்டுப்போடுவதாக அவரிடம் புகார் தெரிவித்தனர்.
பரபரப்பு
மேலும் ஓட்டுச்சாவடி பக்கவாட்டில் உள்ள பாதையை தகர சீட் கொண்டு அ.தி.மு.க.வினரே அடைக்க முயன்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இதையெல்லாம் நாங்கள் பார்த்து கொள்கிறோம், தயவுசெய்து 200 மீட்டருக்கு வெளியில் செல்லுங்கள், மீண்டும், மீண்டும் ஒருவர் ஓட்டளிக்க வாய்ப்பில்லை, விரலில் மை வைத்து ஒவ்வொருவரையும் அதிகாரிகள் பரிசோதித்தே ஓட்டளிக்க விடுகின்றனர்’ என்றனர்.
இதை ஏற்காத அசோக்குமார் எம்.எல்.ஏ., அதிகாரிகள் தங்கள் பணிகளை நேர்மையாக செய்ய வேண்டும். இல்லையென்றால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என கூறி சென்றார். பின்னர் அங்கிருந்தவர்களை கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமையிலான போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story