நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நேற்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. மொத்தம் 70 வாக்குச்சாவடி மையங்களில் 228 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளை மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குமாரசாமிப்பேட்டை, திருமுருக கிருபானந்த வாரியார் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளை அவர் பார்வையிட்டார்.
அனுமதிக்க கூடாது
வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வாக்குப்பதிவு தொடர்பான பதிவேடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளில் வாக்குச்சாவடிகளை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக அவர்களை அழைத்து செல்ல பணியாளர்கள், தன்னார்வலர்கள் சக்கர நாற்காலிகளுடன் தயார்நிலையில் இருக்கின்றார்களா? என்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்ய வேண்டும். 100 மீட்டர் இடைவெளிக்குள் தேவையற்ற வாகனங்களை அனுமதிக்க கூடாது. வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும்.
அறிவுறுத்தல்
வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக நின்று வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக பின்பற்றி வாக்குப்பதிவை சிறப்பாக நடத்தி முடிக்க அனைத்து அலுவலர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் சித்ரா விஜயன், தாசில்தார்கள் ராஜராஜன், அசோக்குமார் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story