தர்மபுரி நகராட்சி 10 பேரூராட்சிகளில் 228 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 228 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 228 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. தர்மபுரி நகராட்சி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பி.மல்லாபுரம், கடத்தூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 10 பேரூராட்சிகளில் மொத்தம் 228 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்தனர். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களுக்கு கையுறை, முககவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதேபோன்று சிறப்பு பாதுகாப்பு போலீசார் தீவிர வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர்.
இதேபோன்று மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆங்காங்கே வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளில் இருந்த போலீசார் தடுத்து அமைதிப்படுத்தினர்.
கண்காணிப்பு கேமராக்கள்
இதேபோன்று வாக்குச்சாவடிகள் முன்பு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட சிறு, சிறு தகராறுகளை போலீசார் சமரசம் செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னசாகரம், பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட போடூர் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் ஆண்கள், பெண்கள் காலை முதலே வாக்காளிக்க வந்தனர். அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
கம்பைநல்லூர்
கம்பைநல்லூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அப்போது ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story