உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
நாகை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
உள்ளாட்சி தேர்தல்
நாகை மாவட்டத்தில் நாகை நகராட்சியில் 36 வார்டுகளுக்கும், வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கும், கீழ்வேளூர், திட்டச்சேரி, தலைஞாயிறு, வேளாங்கண்ணி ஆகிய 4 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள் வீதம் 60 வார்டுகள் உள்ளன.
மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளில் மொத்தம் 117 வார்டுகள் உள்ளன. இதில் நாகை நகராட்சியில் உள்ள ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனால் 116 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
188 வாக்குச்சாவடிகள்
மாவட்டத்தில் 188 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இது மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.வாக்குப்பதிவையொட்டி நேற்று முன்தினம் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் பட்டியல், குண்டூசி, சணல் உள்ளிட்ட 101 பொருட்கள் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
இந்த நிலையில் நேற்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க எல்லைக்கோடு வரையப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்கள் முதலில் வாக்களித்தனர். இதை தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.
செல்பி
காலை முதலே பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ்.மணியன் எம்.எல்.ஏ. வாக்களித்தார்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்குப்பதிவு செய்யும் இடத்திற்கு சிரமமின்றி செல்ல சக்கரநாற்காலிகள் தயார் நிலையில் இருந்தன. இதை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்கு செலுத்தி சென்றனர்.
அதேபோல இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்கு செலுத்தினர். வாக்கு செலுத்தியதற்கு வைக்கப்பட்ட அடையாள மையை வைக்கப்பட்ட விரலை காண்பித்தபடி தங்களின் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உடல் வெப்பநிலை பரிசோதனை
கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு முதலில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கிருமிநாசினி வழங்கப்பட்டது. இதையடுத்து முககவசம், கையுறைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதைதொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அனுமதிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை வாக்குச்சாவடி அலுவலர் பரிசோதனை செய்தார்.
கலெக்டர் ஆய்வு
அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். காலை முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.இதைத்தொடர்ந்து மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதித்த வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திட்டச்சேரியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் கீழ்வேளூர் பேரூராட்சி அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
Related Tags :
Next Story