வாக்குச்சாவடிக்குள் ஊர்ந்து சென்று ஓட்டுப்போட்ட மாற்றுத்திறனாளி பெண்


வாக்குச்சாவடிக்குள் ஊர்ந்து சென்று ஓட்டுப்போட்ட மாற்றுத்திறனாளி பெண்
x
தினத்தந்தி 19 Feb 2022 10:53 PM IST (Updated: 19 Feb 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

சக்கர நாற்காலி இருந்தும் உதவிக்கு ஆளில்லாததால், பெரியகுளத்தில் வாக்குச்சாவடிக்குள் ஊர்ந்து சென்று மாற்றுத்திறனாளி பெண் வாக்களித்தார். பல்வேறு இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் பரிதவிப்புடன் வாக்களித்தனர்.

தேனி:

சாய்தள வசதிகள்

தேனி மாவட்டத்தில் நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 733 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின்சாரம், கழிப்பிட வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சாய்தள வசதிகள் போன்றவை இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. 

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலி வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. ஆனால், தேனி மாவட்டத்தில் பல வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதிகள் இருந்தும் அதிக உயரமாகவும், செங்குத்தாகவும் இருந்ததால் அதில் சக்கர நாற்காலிகளை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. 

சிரமப்பட்ட முதியவர்கள்

தேனி அல்லிநகரம் நகராட்சி 31-வது வார்டுக்கான ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட 2 வாக்குச்சாவடிகளில் ஆண்கள் வாக்குச்சாவடிக்கு மட்டுமே சாய்தள வசதி இருந்தது. பெண்கள் வாக்குச்சாவடிக்கு ஆண்கள் வாக்குச்சாவடி வழியாக வரவேண்டிய நிலைமை இருந்தது. 

ஆனால், அந்த பாதையின் குறுக்கே உடல் வெப்பநிலை பரிசோதனை, சானிடைசர் வழங்குதல் போன்ற பணிகளுக்காக மேஜை போடப்பட்டு இருந்தது. இதனால், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டுகளில் சிரமத்துடன் ஏறிச் சென்று வாக்களித்தனர்.

ஊர்ந்து சென்ற மாற்றுத்திறனாளி

பெரியகுளம் நகராட்சி 18-வது வார்டுக்கான வாக்குச்சாவடி டேவிட் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த வாக்குச்சாவடியில் பெரியகுளத்தை சேர்ந்த வேல்மணி (வயது 35) என்ற மாற்றுத்திறனாளி பெண் நேற்று காலையில் வாக்களிக்க வந்தார். 

அந்த வாக்குச்சாவடியில் சக்கர நாற்காலி இருந்த போதிலும், அவர் வந்தபோது உதவி செய்வதற்கு தன்னார்வலர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், வேல்மணி வாக்குச்சாவடிக்கு ஊர்ந்து கொண்டே சென்றார். வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்து விட்டு மீண்டும் ஊர்ந்து கொண்டே வெளியே வந்து ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார்.

 88 வயது மூதாட்டி

தேனி மாவட்டம் கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 88). வயது முதிர்வு காரணமாக இவரால் எழுந்து நடக்க முடியாது. இருப்பினும் இவர், நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

இவர் வசிக்கிற தெரு, கம்பம் நகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்டதாகும். இந்த வார்டு கவுன்சிலரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு, கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடந்தது.

வயது முதிர்வு, உடல் பலவீனம் ஒரு புறத்தில் வாட்டி வதைத்தாலும் தான் எப்படியாவது வாக்களிக்க வேண்டும் என்ற ஆவலில் பொன்னம்மாள் இருந்தார். இதற்காக, தனது உறவினர்களுடன் ஆட்டோவில் பொன்னம்மாள் வாக்குச்சாவடிக்கு வந்தார்.

தரையில் அமர்ந்தார்

அதன்பிறகு அவரை, உறவினர்கள் வாக்குச்சாவடிக்குள் தூக்கி சென்றனர். அங்கு அவர் தரையில் அமர வைக்கப்பட்டார். வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகள் நாற்காலியில் இருந்து எழுந்து வந்து மூதாட்டியின் விரலில் மை வைத்தனர். 

இதையடுத்து மூதாட்டியிடம் எந்த சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் தேர்தல் அதிகாரி ஒருவர் கேட்டார். அவரிடம், தான் வாக்களிக்க விரும்பிய சின்னத்தை ரகசியமாக காதில் தெரிவித்தார். 

அதன் பேரில் அந்த அதிகாரி, மூதாட்டியின் விருப்பப்படி அவரது வாக்கை பதிவு செய்தார். தள்ளாடும் வயதிலும், தளராமல் வாக்களித்த பொன்னம்மாள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.

உதவி செய்த கலெக்டர்

இதேபோல் பொம்மையகவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் ஓட்டுப்போட வந்த முதியவர்கள் சிரமங்களை சந்தித்தனர். அந்த வாக்குச்சாவடியில் மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் ஆய்வு செய்ய வந்த போது, மூதாட்டி ஒருவர் வாக்களித்துவிட்டு படிக்கட்டில் இறங்குவதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

அப்போது கலெக்டர், அந்த மூதாட்டியை கைத்தாங்கலாக பிடித்து படிக்கட்டில் இருந்து இறங்குவதற்கு உதவி செய்தார். மாவட்டத்தில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் இதுபோன்ற பரிதவிப்புகள் ஏற்பட்டன. 

எனவே, இனி வரும் காலங்களிலாவது வாக்குச்சாவடிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளும் போது மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான ஏற்பாட்டில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story