விளாத்திகுளம் அருகே தாயை அடித்துக்கொன்ற மகன்
விளாத்திகுளம் அருகே மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரங்குடி கன்னிமார்கூட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மனைவி மூக்கம்மாள் (வயது 75). இவர்களுடைய மகன் கணேசன் (49). கூலி தொழிலாளி. மாடசாமி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கணேசனுக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், 6 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணேசனை விட்டு பிரிந்து சென்ற பேச்சியம்மாள் குழந்தைகளுடன் கோவில்பட்டி அருகே மேலப்பட்டியில் வசித்து வருகிறார். கணேசன் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று விட்டு, அவ்வப்போது சொந்த ஊருக்கு சென்று தாயாரை பார்ப்பது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற கணேசன் அடிக்கடி மது குடித்து விட்டு தாயாரிடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் கணேசன் மது குடிக்க பணம் கேட்டு தாயார் மூக்கம்மாளிடம் தகராறு செய்து, அவரை கம்பால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மூக்கம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் கணேசன் தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சூரங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த மூக்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கணேசனை வலைவீசி தேடி வருகின்றனர். விளாத்திகுளம் அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்த தாயாரை மகனே அடித்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story