பதற்றமும், பரபரப்புமாக நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்


பதற்றமும், பரபரப்புமாக நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
x
தினத்தந்தி 19 Feb 2022 11:03 PM IST (Updated: 19 Feb 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பதற்றமும், பரபரப்புமாக நடந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டனர்.

தேனி:

உள்ளாட்சி தேர்தல்

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் உள்ள 177 கவுன்சிலர் பதவிகள், 22 பேரூராட்சிகளில் உள்ள 336 கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 513 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 2 நகராட்சி கவுன்சிலர்கள், 5 பேரூராட்சி கவுன்சிலர்கள் என 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 506 பதவிகளுக்கு 1,960 பேர் போட்டியிட்டனர்.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 733 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. பின்னர் அதில் பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு, வாக்குப்பதிவு தொடங்கியது.

எந்திரத்தில் கோளாறு

மாவட்டம் முழுவதும் தேர்தல் நடந்த இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வந்த மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வரிசையில் நின்றனர். பலரும் முக கவசம் அணியாமல் வந்தனர். அவர்களுக்கு வாக்குப்பதிவு மையத்தில் முக கவசம் வழங்கப்பட்டது. 

பல வாக்குப்பதிவு மையங்களில் வைக்கப்பட்டு இருந்த முக கவசங்கள், காலை 11 மணிக்குள் தீர்ந்து போயின. இதனால், பிற்பகலில் முக கவசம் அணியாமல் பலரும் வாக்களித்துச் சென்றனர்.

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2-வது வார்டுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி எண் 6-ல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் அதை சரி செய்யும் பணி நடந்தது. இதனால், 30 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. 

வாக்காளர்கள் காத்திருப்பு

வீரபாண்டி பேரூராட்சி 6-வது வார்டுக்கான வாக்குச்சாவடி, முத்துதேவன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து கொண்டு இருந்த நிலையில் காலை 9.30 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. அதுவரை அந்த எந்திரத்தில் 85 வாக்குகள் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது.

அதை பழுதுபார்க்க பொறியாளர்கள் அங்கு வந்தனர். ஆனாலும் எந்திரம் செயல்படாததால், அங்கு மாற்று வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டு, காலை 10.30 மணியளவில் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இதனால், 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு இருந்தது. வாக்களிக்க வந்த மக்கள் காத்திருந்து ஓட்டுப்போட்டனர்.

தேனி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்.

தி.மு.க. -பா.ஜ.க.
 
தேனி கொண்டு ராஜா நினைவு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு மைய வளாகத்துக்குள் நின்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். அவர்களை போலீசார் வெளியேற்றினர். அப்போது தி.மு.க. வேட்பாளர்கள் சிலர், போலீஸ் அதிகாரிகளிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் அந்த மையத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் வாக்காளர்களை மரியாதைக்குறைவாக நடத்தியதாக கூறி வாக்காளர் ஒருவர் அவரிடம் வாக்குவாதம் செய்தார். 

அப்போது அங்கு வந்த தி.மு.க.வினரும் அந்த முன்னாள் ராணுவ வீரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. பின்னர் தி.மு.க.வினரை போலீசார் சமரசம் செய்தனர்.

ஓட்டுக்கு பணம் 

இந்நிலையில் அந்த வாக்குச்சாவடி வளாகத்துக்குள் தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர். இதனால், அதே வளாகத்தில் அமைந்துள்ள 20-வது வார்டுக்கான வாக்குச்சாவடி முன்பு தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

மேலும், 19-வது வார்டுக்கான வாக்குச்சாவடி முன்பு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. 

பின்னர் போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். 

போலீசாருடன் வாக்குவாதம்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே அங்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் பிற்பகல் வரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், தேவதானப்பட்டி உள்பட மாவட்டத்தில் பல இடங்களிலும் வாக்குச்சாவடி வளாகத்தில் நின்று அரசியல் கட்சியினர் தங்களின் சின்னங்களை கூறி வாக்கு சேகரித்தனர். 

அவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றுவதும், மீண்டும் அவர்கள் வளாகத்துக்குள் வந்து வாக்கு சேகரிப்பதுமாக இருந்தனர். இதனால், பல இடங்களில் அரசியல் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போடி, சின்னமனூர்

போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பேரூராட்சி           13-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் 114 வாக்குகள் பதிவாகியிருந்தது. அப்போது திடீரென வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. கோளாறை சரி செய்ய முடியாததால், வேறு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.

சின்னமனூர் நகராட்சியில் உள்ள 27 கவுன்சிலர்கள் பதவிக்கு 137 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 47 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. ஆண்கள், பெண்கள் தனித்தனியாக வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. சின்னமனூர் நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வத்துடன் நீண்டவரிசையில் நின்றபடி வாக்களித்தனர். 

கூடலூர் நகராட்சி

கூடலூர் நகராட்சி மேலக்கூடலூர் பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 17-வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் ஆண்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 

கீழக்கூடலூர் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் சரிவர செயல்படவில்லை. இதனையடுத்து மாற்று எந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 1-வது வார்டு வாக்குச்சாவடியை உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Next Story