கள்ள ஓட்டுப்போட முயன்ற வாலிபர் பிடிபட்டார்
நாகை நகராட்சியில் கள்ள ஓட்டுப்போட முயன்ற வாலிபர் பிடிபட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யாததால் போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிப்பாளையம்:
நாகை நகராட்சியில் கள்ள ஓட்டுப்போட முயன்ற வாலிபர் பிடிபட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யாததால் போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..
கள்ள ஓட்டு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. நாகை நகராட்சியில் 28-வது வார்டுக்கு வாக்குப்பதிவு நாகை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் வாலிபர் ஒருவர் வாக்களிக்க வந்தார்.
அப்போது அ.தி.மு.க வேட்பாளரின் பூத் ஏஜெண்ட் முரளிதரன், அந்த வாலிபரிடம் இருந்த பூத் சிலிப்பை வைத்து வாக்காளர் பட்டியலை பார்த்தபோது அதில் ராமச்சந்திரன் என்று பெயர் இருந்தது. ஆனால் வாக்காளர் பட்டியலில் உள்ள ராமச்சந்திரன் தற்போது வெளிநாட்டில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் ராமச்சந்திரன் பெயரில் கள்ள ஓட்டுப்போட வந்தது தெரிய வந்தது. உடனே அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
பின்னர் அவரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வாலிபர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் மீது யாரும் புகார் தராததால் அவரை வெளியே விடுவதாக தகவல் பரவியது. இதனால் அ.திமு.க.வினர் நகர செயலாளர் தங்க.கதிவரன் தலைமையில் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
இதையடுத்து பூத் ஏஜெண்ட் முரளிதரன் அந்த வாலிபர் மீது போலீசில் புகார் கொடுத்தார். ஆனாலும் அந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் டவுன் போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர்.
பரபரப்பு
அப்போது இன்ஸ்பெக்டர் பெரியசாமி, போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிடிபட்ட வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதனையடுத்து அ.தி.மு.க.வினர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story