நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்குச்சாவடிகளை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்குச்சாவடிகளை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், ஒடுகத்தூர், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, திருவலம் ஆகிய பேரூராட்சிகளில் மொத்தம் 178 வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 819 பேர் போட்டியிட்டனர்.
வேலூர் மாநகராட்சியில் 2 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 5 லட்சத்து 78 ஆயிரத்து 390 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். அவர்கள் வாக்களிக்க 200 வாக்குச்சாவடி மையங்களில் 628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை 6 மணியளவில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மாதிரி வாக்குப்பதிவை முடித்து, உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவிற்கு தயாராக இருந்தனர்.
அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
காலை 9 மணி வரை 8.82 சதவீதம் வாக்குகளே பதிவாகின. அதன்பின்னர் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர். மதியவேளையில் மட்டும் வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது.
அதன் பின்னர் கூட்டம் அதிகரித்து விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகின. பெண்கள் அதிகளவு வாக்குச்சாவடிக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்ததை காண முடிந்தது.
அதேபோன்று முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலில் வாக்கை பதிவு செய்த இளம்பெண்கள், இளைஞர்கள் உற்சாகமாக காணப்பட்டனர். .
பதற்றமான 87 வாக்குச்சாவடிகள் உள்பட 628 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு மற்றும் வெப் கேமரா பொருத்தப்பட்டு, அவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெரிய திரையின் (மானிட்டர்) மூலம் கண்காணிக்கப்பட்டது.
வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் வரை அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க தடை செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் பல வாக்குச்சாவடிகளில் மாலை வேளையில் தடையை மீறி சிலர் வாக்கு சேகரித்ததை காண முடிந்தது.
வேலூர் மாவட்டம் முழுவதும் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடந்தது. பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் திடீரென கோளாறு மற்றும் பழுது ஏற்பட்டன.
அவற்றை சரிசெய்யும் பணியில் பெல் என்ஜினீயர்கள் ஈடுபட்டனர். இதன்காரணமாக சில வாக்குச்சாவடிகளில் சிறிதுநேரம் வாக்குப்பதிவு தாமதமானது.
கலெக்டர் ஆய்வு
வேலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குமாரவேல்பாண்டியன், மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப் ஆகியோர் வேலூர் அல்லாபுரம் அண்ணாநகரில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். .
அதைத்தொடர்ந்து கலெக்டர் அரியூர், குடியாத்தம் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் போலீசார், ஊர்க்காவல்படையினர் என்று 1,320 பேர், 60 பறக்கும்படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வேலூர் சத்துவாச்சாரி, கொணவட்டம், சைதாப்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் வாக்குச்சாவடி மைய மேற்பார்வையாளர், வேட்பாளர்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டன. சில இடங்களில் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது.
பின்னர் அவை வேனில், போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களான வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி, பேரணாம்பட்டு மேரிட் ஹாஜி இஸ்மாயில் சாகிப் கல்லூரி, பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் பள்ளி, பள்ளிகொண்டா ஆர்.சி.எம்.பள்ளி ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்குள்ள அறைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காட்பாடி
வேலூர் மாநகராட்சியின் உள்ள 60 வார்டுகளில் 1-வது மண்டலமான தாராபடவேடு மண்டலத்தில் 15 வார்டுகள் இருக்கிறது.
இந்த வார்டுகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலையில் வாக்களிக்க மக்கள் வந்தனர். கிளித்தான்பட்டறை, அருப்புமேடு ஆகிய பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது. வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது நீக்கும் என்ஜினீயர்கள் வந்து பழுது நீக்கப்பட்ட பிறகு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.
13-வது வார்டுக்கு உட்பட்ட கழிஞ்சூர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் சுமார் 20 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சரிசெய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
காட்பாடி பள்ளிக்குப்பம் தொடக்கப்பள்ளியில் பகல் 1.15 மணிக்கு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அவர்களுடன் நரிக்குறவர்களும் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். பல்வேறு இடங்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
குடியாத்தம்
குடியாத்தம் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் மொத்தம் 85 ஆயிரத்து 432 வாக்காளர்கள் உள்ளனர். 36 வார்டுகளில் வாக்களிக்க 31 மையங்களில் 91 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது.
குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை நகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் சந்தப்பேட்டை வள்ளலார் மேல்நிலை பள்ளியில் யில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு எந்திரம் வேலை செய்யாததால், புதிய வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டு அதன்பின் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் 30 நிமிடத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டது.
தரணம்பேட்டை ஆலியார் தெருவில் நகராட்சி முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்குள் அரசியல் கட்சியினர் தங்கள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்ததாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கூடியிருந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தாழையாத்தம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி, செருவங்கி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்களிக்க வந்த முதியோர்கள் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெல்லூர்பேட்டை நகராட்சி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மையத்திற்கு வாக்களிக்க வந்த 90 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டியை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் லட்சுமி வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்று உதவினார்.
பள்ளிகொண்டா
பள்ளிகொண்டா பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 64 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. 6-வது வார்டில் 1,210 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களுக்காக ஒரே ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் கூட்ட நெரிசலில் வாக்காளர்கள் சிக்கித் தவித்தனர் அப்போது கைக்குழந்தையுடன் வந்த ஒரு வாக்காளர் நேராக சென்று வாக்களித்ததால் தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் வாக்காளர்களிடம் சமாதானம் பேசி தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது.
18-வது வார்டில் மின்னணு வாக்கு எந்திரம் பழுதானதால் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதனையடுத்து சரி செய்யப்பட்டு, 1 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
மாலை 6 மணிக்கு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் 1 மணி நேரத்தை கூடுதலாக வழங்க வேண்டும் என தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாது என கூறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
டி.ஐ.ஜி. ஆய்வு
திருவலத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியை வேலூர் டி.ஐ.ஜி ஆனி விஜயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story