தேர்தலில் முதல் முறையாக வாக்களித்த நரிக்குறவர்கள்


தேர்தலில் முதல் முறையாக வாக்களித்த நரிக்குறவர்கள்
x
தினத்தந்தி 19 Feb 2022 11:42 PM IST (Updated: 19 Feb 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் நரிக்குறவர் சமூகத்தினர் நேற்று முதல் முறையாக வாக்களித்தனர்.

தூத்துக்குடி:
நாடோடி வாழ்க்கை முறையை கொண்ட நரிக்குறவர் சமூகத்தினருக்கு இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்து வந்தது. வாக்காளர் அடையாள அட்டையும் இல்லாத நிலை இருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 20-வது வார்டு புதிய பஸ் நிலையம் அருகே பல ஆண்டுகளாக நிரந்தரமாக தங்கி உள்ள நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை மேற்கொண்டார். 

அதன்படி, நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 52 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையும் சமீபத்தில் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் நரிக்குறவர்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

இந்த நிலையில் நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் காலையிலேயே ஆர்வத்துடன் வந்தனர். அவர்கள் குடும்பத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று முதல் முறையாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அவர்களுக்கு வாக்களிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினர்.

இதுகுறித்து நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது:-
நாங்கள் நீண்டகாலமாக புதிய பஸ் நிலையம் பகுதியில் வசித்து வருகிறோம். இதுவரை எந்த தேர்தலிலும் ஓட்டு போட்டது கிடையாது. தற்போது முதல் முறையாக ஓட்டு போட்டு உள்ளோம். இது மகிழ்ச்சியாகவும், புதிய அனுபவமாகவும் உள்ளது. எங்களுக்கும் அங்கீகாரம் கிடைத்து இருப்பதாக உணருகிறோம். இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.






Next Story