தனித்தனி சம்பவத்தில் காதல் திருமணம் செய்த 2 இளம்பெண்கள் தற்கொலை


தனித்தனி சம்பவத்தில் காதல் திருமணம் செய்த 2 இளம்பெண்கள் தற்கொலை
x
தினத்தந்தி 19 Feb 2022 11:43 PM IST (Updated: 19 Feb 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

தனித்தனி சம்பவத்தில் காதல் திருமணம் செய்த 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

கடலூர், 

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கே.தொழுதூரை சேர்ந்தவர் நந்தினி (வயது 22). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அகிதேவ் (2½) என்ற மகன் உள்ளான். ராஜேஷ்குமார், அரசு வேலை வாங்குவதாக கூறி, நந்தினியிடம் 12 பவுன் நகையை வாங்கி, அதனை கடந்த ஓராண்டுக்கு முன்பு விற்று விட்டதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று நந்தினி, தான் கழுத்தில் போட்டுக் கொள்ள ஒரு நகை கூட இல்லை என ராஜேஷ்குமாரிடம் பிரச்சினை செய்துள்ளார். பின்னர் சேலையால் வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே நந்தினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் நந்தினியின் தாய் செல்வமணி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மற்றொரு சம்பவம்

திட்டக்குடி அருகே உள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையன். இவரும், பெலாந்துறையை சேர்ந்த தர்மராஜன் மகள் அறிவுக்கரசி (24) என்பவரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அர்ஷன் (4), சர்வேஷ் (6 மாத குழந்தை) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கருப்பையன், சென்னை கோயம்பேட்டில் உள்ள பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவர், அதன் பிறகு வேலைக்கு செல்லவில்லை. இதனால் அறிவுக்கரசி, கருப்பையனிடம் ஏன் வேலைக்கு போகவில்லை என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கருப்பையன் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு, அறிவுக்கரசி துப்பட்டாவால் தூக்குப்போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

சாவில் சந்தேகம்

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அறிவுக்கரசி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்வமணி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story