ஜனநாயக கடமையாற்றிய முதியவர்கள்
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தள்ளாத வயதிலும் தளராமல் முதியவர்கள் ஊன்றுகோல், சக்கர நாற்காலி உதவியுடன் வந்து வாக்களித்தனர்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தள்ளாத வயதிலும் தளராமல் முதியவர்கள் ஊன்றுகோல், சக்கர நாற்காலி உதவியுடன் வந்து வாக்களித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இளைஞர்களுக்கு நிகராக முதியவர்களும் வாக்களிக்க ஆர்வம் காட்டினர். தள்ளாத வயதிலும் தளராமல் முதியவர்கள் ஊன்றுகோல், சக்கர நாற்காலி உதவியுடன் சென்று தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
ஜனநாயக கடமை
திருவாரூர் நகராட்சியில் திருவாரூர் கொத்த தெருவை சேர்ந்த ராஜலெட்சுமி (வயது 79) நேற்று தள்ளாத வயதிலும் யாருடையை உதவியையும் எதிர்பார்க்காமல் தனியாக ஊன்றுகோல் உதவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குப்பதிவு குறித்து அவர் கூறுகையில், அரசு கொடுக்கும் அனைத்து சலுகைகளையும் வாங்கி கொள்வதில் ஆர்வம் காட்டுகிறோம். இதைப்போல வாக்களிப்பதில் நமது ஆர்வத்தை காட்ட வேண்டும். வாக்களிப்பதும் நமது ஜனநாயக கடமை என கூறினார். திருவாரூர் இ.வி.எஸ் நகர் பகுதியை சேர்ந்த விசாலாட்சி (95) தனது மகள் உதவியுடன் வந்து வாக்களித்தார். வாக்களிப்பது நமது கடமை. ஜனநாயக கடமையாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். அது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்தேன் என விசாலாட்சி கூறினார்.
பாராட்டு
திருவாரூர் நகரை சேர்ந்த தங்கராசு (85) என்பவரும் ஸ்கூட்டியில் உறவினர் உதவியுடன் நடக்க முடியாத நிலையில் வாக்குச்சாவடிக்கு வந்தார். அங்கு தேர்தல் பணியில் இருந்த ஊழியரின் உதவியுடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார். இதைப்போல மாற்றுத்திறனாளிகளும் சக்கர நாற்காலி உதவியுடன் வந்து வாக்களித்தனர்.
மன்னார்குடி நகராட்சிக்குட்ட 33 வார்டுகளில் மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மன்னார்குடி மாடல் நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று காலை 96 வயதான மகமுதாபீவி என்ற மூதாட்டி வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். அவரை சக்கர நாற்காலியில் அமர வைத்து பாதுகாப்பான முறையில் வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைத்தனர். 23-வது வார்டில் வாக்களிக்க வந்த 95 வயதான மூதாட்டி சிவக்கொழுந்து சக்கர நாற்காலியில் அழைத்துசெல்லப்பட்டு வாக்களித்தார்.
அரசின் திட்டங்கள், சலுகைகள் மற்றும் இலவசங்களை பெறுதில் ஆர்வம் காட்டும் அனைவரும், வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் தள்ளாத வயதிலும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை முடித்த முதியவர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டனர்.
Related Tags :
Next Story