தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் சாலை மறியல்
திருவண்ணாமலையில் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாக சந்தேகம் உள்ளதால் வாக்குப்பதிவை நிறுத்தக்கோரி ஆதரவாளர்களுடன் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாக சந்தேகம் உள்ளதால் வாக்குப்பதிவை நிறுத்தக்கோரி ஆதரவாளர்களுடன் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 பேர் போட்டி
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் நேற்று காலை முதல் விறு, விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலையொட்டி நகராட்சி நிர்வாகம் மூலம் அனைத்து வார்டு பகுதிகளிலும் பூத் சிலிப் வழங்கப்பட்டது. ஆனால் 25-வது வார்டில் முறையாக பூத் சிலிப் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று 25-வது வார்டுக்கான வாக்குப்பதிவு திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 8 பேர் போட்டியிடுகின்றனர். வழக்கம் போல் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குப்பதிவு நிறுத்தம்
காலை 11 மணி அளவில் பூத் சிலிப் இல்லாத நபர்கள் வாக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் முன்னாள் வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் என்பவர் பெயரில் வேறு ஒரு நபர் வாக்களித்து விட்டதாக அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
காலையில் இருந்து அந்த வாக்குச்சாவடி மையத்தில் சல சலப்பு இருந்து வந்தது. இதனால் வாக்குச்சாவடி மையத்தில் அலுவலர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் 1 மணி நேரத்திற்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற வில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர்.
சாலை மறியல்
வாக்குச்சாவடி மைய வளாகத்தில் தேவையின்றி நின்றவர்களை போலீசார் விரட்டினர். அப்போது தி.மு.க. வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளு-முள்ளும் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் 50 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி இருந்தது. இதனால் 25-வது வார்டுக்கான வாக்குச்சாவடி மையத்தில் கள்ள ஓட்டு போடப்பட்டு உள்ளதாக கூறி வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் என்று தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் திடீரென மதியம் 12.30 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் அதிரடி படையினருடன் அங்கு வந்தார். இதற்கிடையில் அங்கு தி.மு.க. மருத்துவ அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் நிர்வாகிகள் நேரில் வந்தனர்.
பின்னர் அவர்களும், போலீஸ் சூப்பிரண்டும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு, அவர்களை வாக்குச்சாவடி மைய வளாகத்திற்குள் அழைத்து வந்து அங்கு நடந்த சம்பவம் குறித்து விவரத்தை கேட்டறிந்தனர்.
போலீஸ் குவிப்பு
மேலும் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதியும் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார். வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், எ.வ.வே.கம்பன் ஆகியோர் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பேசுகையில், வாக்குச்சாவடி மையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி உள்ளது.
கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டு உள்ளதாக சந்தேகம் உள்ளதால் வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் என்று கூறினர். இதுகுறித்து அவர் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிப்பதாக கூறினார். தொடர்ந்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு இருந்தது.
வாக்குப்பதிவு தொடங்கியது
மதியம் 1.30 மணி அளவில் அங்கு வந்த மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கீதா வாக்குச்சாவடி மையத்திற்குள் வந்து வாக்குப்பதிவை ஏன் நிறுத்தினீர்கள் என்று தேர்தல் அலுவலர்களிடம் கேட்டார். மேலும் வாக்குச்சாவடி மையத்தில் இருந்தவர்களை வெளியே செல்லவும் உத்தரவிட்டார்.
வாக்குப்பதிவை யாருக்காவும் நிறுத்தக்கூடாது என்று தொடர்ந்து வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை நகராட்சி அலுவலகத்திற்கு சென்று தான் மனு அளிக்க வேண்டும் என்று இங்கு பிரச்சினை செய்யக்கூடாது என்று அவர்களை வெளியே அனுப்பினார்.
இதனையடுத்து அங்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
தொடர்ந்து வாக்குச்சாவடி மையத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த வாக்குச்சாவடி மையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று நகராட்சி தேர்தல் அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் தாசில்தார் சுரேஷ் ஆகியோர் தடையின்றி வாக்குப்பதிவு நடைபெறுவதை தொடர்ந்து கண்காணித்தனர். இதனால் திருவண்ணாமலை நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story