5 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கக்கோரி வாக்குவாதம்


5 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கக்கோரி வாக்குவாதம்
x
தினத்தந்தி 20 Feb 2022 12:15 AM IST (Updated: 20 Feb 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேல்விஷாரத்தில் 5 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில் 21 வார்டு உறுப்பினர் பதவிக்கு 42 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் 17, 18,19 ஆகிய 3 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு மையம் ஹாஜ்பேட்டை 2-வது தெருவில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது.

மாலை 5 மணியளவில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்குப்பதிவு செய்யும் நேரத்தில் பொதுமக்கள் தங்களை வாக்களிக்க அனுமதிக்கக்கோரி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலைந்து சென்றனர். 

மேலும் வாக்குப்பதிவு மையத்தில் இருந்த வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டன. 

ஆனால் சில வேட்பாளர்கள் தங்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்க வேண்டும் எனக்கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்கவே அனைவரும் கலைந்து சென்றனர். 

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமாக காணப்பட்டது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

Next Story