கரூர் மாநகராட்சியில் 75.84 சதவீதம் ஓட்டுகள் பதிவானது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 76.34 சதவீதம் வாக்குகள் பதிவானது. மாநகராட்சியில் 75.84 சதவீதம் பதிவானது.
கரூர்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் ஆகிய 3 நகராட்சிகள், அரவக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், மருதூர், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், நங்கவரம், புஞ்சை தோட்டக்குறிச்சி ஆகிய 8 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
கரூர் மாநகராட்சி முதல் மேயர் தேர்தலை சந்தித்து உள்ளது. இதனால் 48 வார்டுகளில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சியின் கவுன்சிலரே கரூர் மாநகராட்சியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார். இதனால் மேயர் பதவியை கைப்பற்ற தி.மு.க.- அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வாக்குப்பதிவு
இதையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்றுமுன்தினம் இரவே தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் கொரோனா தடுப்பு பொருட்களும் தயார் நிலையில் இருந்தன. வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிகளின் முன்பு சாமியானா பந்தல்கள் போடப்பட்டு இருந்தன. மொத்தம் உள்ள 246 வார்டுகளில் 938 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 5 பேர் போட்டியின்றி தேர்வாகி இருந்தனர். மீதமுள்ள 241 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் 22-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். மீதமுள்ள 47 வார்டுகளுக்கு, 187 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
கரூர் மாநகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது வரிசையில் நின்ற வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். முன்னதாக வாக்காளர்கள் முககவசம் அணிந்து வாக்களிக்க வந்திருந்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வாக்குச்சாவடியிலேயே முககவசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்த பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்பட்டன.
நீண்ட வரிசையில்...
கரூர் மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர். புதிய வாக்காளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். மாற்றுத்திறனாளிகளும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். வயதானவர்கள் வீல்சேர் மூலமாகவும், உறவினர்களின் உதவியுடனும் வந்ததை காண முடிந்தது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து சென்றனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
கரூர் கோட்டைமேடு உயர்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கும் முன்பு எந்திரம் பழுதானது. இதனால் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை. இதையடுத்து, அலுவலர்கள் அந்த எந்திரத்தை சரிசெய்தனர். இதனால் வாக்குப்பதிவு சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. தொடர்ந்து வாக்காளர்கள் அந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
அமைதியான முறையில் வாக்குப்பதிவு
கரூர் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. இதில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் மற்றும் மிகவும் பதற்றம் நிறைந்த 31 வாக்குச்சாவடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்திட சி.சி.டி.வி. மற்றும் வெப் ஸ்டீமிங் மூலம் கண்காணிக்கப்பட்டது. கரூர் மாநகராட்சியை பொறுத்தவரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வாக்குப்பதிவு நிலவரம்
கரூர் மாநகராட்சியை பொறுத்தவரை காலை 9 மணி நிலவரப்படி 10.67 சதவீதமும், மதியம் 11 மணி நிலவரப்படி 24.01 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 46.04 சதவீதமும் வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மதியம் 1 மணி நிலவரப்படி 3 நகராட்சிகளில் 46.73 சதவீதமும், 8 பேரூராட்சிகளில் 63.49 சதவீதமும் வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது. கரூர் மாவட்டத்தில் மொத்தம் 50.04 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது.
மதியம் 3 மணி நிலவரப்படி 8 பேரூராட்சிகளில் 76.69 சதவீதமும், 3 நகராட்சிகளில் 58.92 சதவீதமும், மாநகராட்சியில் 60.28 சதவீதமும் என மொத்தம் 63.56 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 8 பேரூராட்சிகளில் 85.47 சதவீதமும், 3 நகராட்சிகளில் 67.29 சதவீதமும், மாநகராட்சியில் 72.32 சதவீதமும் பதிவாகி இருந்தது.
இறுதியாக மாலை 6 மணியளவில் தேர்தல் நிறைவடைந்தது. இதில், 8 பேரூராட்சிகளில் 86.43 சதவீதமும், 3 நகராட்சிகளில் 68.15 சதவீதமும், கரூர் மாநகராட்சியில் 75.84 சதவீதம் என மொத்தம் 76.34 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது.
Related Tags :
Next Story