நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது.
பெரம்பலூர்:
ஓட்டுப்பதிவு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுகளுக்கும், குரும்பலூர், அரும்பாவூர், லெப்பைக்குடிகாடு பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளுக்கும், பூலாம்பாடி பேரூராட்சியில் 13 வார்டுகளுக்கும் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இறுதி வாக்காளர்கள் பட்டியலின்படி, பெரம்பலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 40,614 ஆண் வாக்காளர்களும், 43,453 பெண் வாக்காளர்களும், 6 மூன்றாம் (திருநங்கை) பாலின வாக்காளர்களும் என மொத்தம் 84,073 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டுகளுக்கு 112 வேட்பாளர்களும், பேரூராட்சிகளில் குரும்பலூரில் 15 வார்டுகளுக்கு 51 வேட்பாளர்களும், அரும்பாவூரில் 15 வார்டுகளுக்கு 45 வேட்பாளர்களும், பூலாம்பாடியில் 13 வார்டுகளுக்கு 31 வேட்பாளர்களும், லெப்பைக்குடிக்காட்டில் 15 வார்டுகளுக்கு 80 வேட்பாளர்களும் என மொத்தம் 79 பதவியிடங்களுக்கு மொத்தம் 319 பேர் போட்டியிடுகின்றனர்.
வாக்குச்சாவடிகள்
பெரம்பலூர் நகராட்சியில் தனித்தனியாக ஆண், பெண் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தலா 19 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 12 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 50 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. குரும்பலூர், அரும்பாவூர் பேரூராட்சியில் தலா 15 வாக்குச்சாவடிகளும், பூலாம்பாடியில் 13 வாக்குச்சாவடிகளும், லெப்பைக்குடிகாட்டில் தனித்தனியாக ஆண், பெண் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தலா 2 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 13 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 17 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 110 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஓட்டுப்பதிவிற்காக பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், ஓட்டுப்பதிவிற்கான தேவையான பொருட்கள், கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அனுப்பப்பட்டது. நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று சரியாக காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் ‘சீல்'களை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உடைத்து, அதனை ஒவ்வொன்றுடன் பொருத்தி ஓட்டுப்பதிவிற்கு தயார் நிலையில் வைத்தனர்.
ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்
ஓட்டுப்பதிவு தொடங்கியவுடன் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க வந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளருக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. பின்னர் வாக்காளரின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்கள் வலது கையில் அணிய பாலித்தீன் கையுறை வழங்கப்பட்டது. முககவசம் அணிந்து வந்த வாக்காளர்களை மட்டும் வாக்குச்சாடிக்குள் அலுவலர்கள் அனுமதித்தனர். முககவசம் இல்லாதவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. வாக்காளர்கள் மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களித்தனர்.
நீண்ட வரிசையில் நின்று...
இதனால் காலையிலேயே நிறைய வாக்குச்சாவடி மையங்களில் ஆண், பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்து சென்றதை காணமுடிந்தது. வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களின் சின்னம் அருகே உள்ள பொத்தானை அழுத்தியவுடன் பீப் என்ற சத்தம் ஒலித்தது. முன்னதாக வாக்களித்தற்கு அடையாளமாக வாக்காளர்களின் இடது கையின் ஆட்காட்டி விரலில் அழியாத மை இடப்பட்டது.
பகல் நேரத்தில் வெயில் கடுமையாக கொளுத்துவதால் வாக்காளர்கள் நிறைய பேர் காலை 11 மணிக்கு முன்பாக வந்த வாக்கை பதிவு செய்தனர். பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீவெங்கடபிரியுாவும், பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரனும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். நகராட்சி-பேரூராட்சிகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். வாக்குச்சாவடிகளை தேர்தல் அதிகாரி ஸ்ரீவெங்கடபிரியா, போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பப்பட்டன
ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர்கள் வாக்கினை உறுதி செய்யும் எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றை வாக்குச்சாவடி அலுவலர்கள் வேட்பாளர்களின் பூத் ஏஜென்டு முன்னிலையில் ‘சீல்’ வைத்தனர். பின்னர் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகளும் லாரிகளில் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் க.எறையூர் அருகே உள்ள மகாத்மா பப்ளிக் பள்ளிக்கு அனுப்பப்பட்டது.
Related Tags :
Next Story