காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மோதல்; 3 பேர் காயம் -போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
குழித்துறை நகராட்சி தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
குழித்துறை,
குழித்துறை நகராட்சி தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி தேர்தல்
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை போன்று தி.மு.க.வுடன் இணைந்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தன.
ஆனால் குமரி மேற்கு மாவட்டத்தில் குழித்துறை, கொல்லங்கோடு, பத்மநாபபுரம் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் பல பேரூராட்சிகளில் தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு தனித்தனியாக தேர்தலை எதிர் கொண்டது.
அதன்படி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க.வுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. இந்தநிலையில் நேற்று பரபரப்புடன் தேர்தல் நடந்தது.
காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் மோதல்
அப்போது குழித்துறை நகராட்சியில் 12-வது வார்டில் நடந்த தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, 12-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக ஜூலியட் மெர்லின் ரூத், காங்கிரஸ் வேட்பாளராக லிசிஜாய் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த வார்டிற்கான வாக்குப்பதிவு மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த வாக்குச்சாவடியில் சிறிது தொலைவில் இருந்தபடி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் பூத் சிலிப்பை கொடுத்தபடி தங்களுடைய கட்சிக்கு வாக்களியுங்கள் என வாக்காளர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் பணமும் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் 2 கட்சியை சேர்ந்தவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
வேட்பாளர் தாக்கப்பட்டார்
இந்த தாக்குதலில் காங்கிரஸ் பெண் வேட்பாளர் லிசிஜாய், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரின் கணவர் சம்பத் ஆகியோர் காயமடைந்தனர்.
இதற்கிடையே தாக்குதல் பற்றி கேள்விபட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். நிலைமை விபரீதமாவதை தடுக்க 2 தரப்பை சேர்ந்தவர்கள் மீதும் தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.
காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story