வாக்குப்பதிவில் முறைகேடு என அ.தி.மு.க.வினர் புகார்
புதுக்கோட்டை நகராட்சி 18-வது வார்டு வாக்குப்பதிவில் முறைகேடு நடந்ததாக அ.தி.மு.க.வினர் புகார் கூறியதோடு வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்குப்பதிவு 120 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 17, 18 ஆகிய வார்டுகளுக்குரிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரே பள்ளியில் 2 வார்டுகளுக்கு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்ததால் இந்த பள்ளியில் வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 18-வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 6 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில் 18-வது வார்டு வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடியில் நேற்று மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவில் முறைகேடு நடப்பதாக கூறி அ.தி.மு.க. வேட்பாளர் பாரதி மற்றும் சுயேச்்சை வேட்பாளர்கள் அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
அ.தி.மு.க.வினர் முற்றுகை
வாக்காளர்களிடம் கையெழுத்து பெறப்படும் இடத்தில் பெரும்பாலானோரிடம் கைரேகை பெறப்பட்டதாகவும், கையெழுத்து எதுவும் இல்லை எனவும் அதற்கான புகைப்படம் மற்றும் வீடியோவை காண்பித்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். கள்ள ஓட்டுப்பதிவு நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் அரசு துறையில் பணியாற்றும் பெண் ஊழியரின் ஓட்டினை வேறு ஒருவர் பதிவு செய்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியதோடு வாக்குச்சாவடி மையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த புதுக்கோட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராஜாவையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வாக்குச்சாவடி மைய வளாகத்தில் வாக்காளர்கள் தவிர நின்ற மற்றவர்களை விரட்டினர். பின்னர், டவுன் போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்து முறையிட்டனர். வாக்குப்பதிவில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை எனவும், எழுத்து மூலமாக அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும்படி போலீசார் அறிவுறுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.
வார்டு மாறி வாக்களித்த பெண்
இந்த சம்பவத்தை தொடர்ந்து அடுத்ததாக 17-வது வார்டில் உள்ள பெண் வாக்காளர் ஒருவர், 18-வது வார்டில் வாக்களித்தார். அவரது பெயரை தெரிவிக்கும்போது வாக்குச்சாவடியில் அலுவலர்கள் தவறாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஒரு சில நிமிடத்தில் அந்த பெண்ணும் வாக்களித்து விட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையறிந்த அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் வாக்குச்சாவடியை மீண்டும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17-வது வார்டு வாக்காளர்களை 18-வது வார்டில் ஓட்டுப்போட அனுமதிப்பதாகவும், இதற்கு உடந்தையாக அதிகாரிகள் இருப்பதாகவும் அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர். இதனால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. புதுக்கோட்டை நகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி நாகராஜன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, தேர்தல் பிரிவு அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.அதன்பின்னர் அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனைத்தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பின் வாக்குப்பதிவு நடைபெற்றது.
Related Tags :
Next Story