வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை, கும்பகோணம் ஆகிய 2 மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் உள்ள 456 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நேற்றுகாலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பு பெட்டியில் வைத்து தேர்தல் அலுவலர்கள் சீல் வைத்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேன்களில் ஏற்றப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.
வாக்கு எண்ணும் மையங்கள்
தஞ்சை மாவட்டத்தில் 7 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 196 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அதேபோல் வல்லம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேலதிருப்பூந்துருத்தி, மதுக்கூர், அய்யம்பேட்டை, மெலட்டூர், அம்மாப்பேட்டை ஆகிய 9 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
கும்பகோணம், அதிராம்பட்டினம்
கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கும்பகோணம் கருப்பூர் ரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிக்கும், அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும் போலீஸ் பாதுகாப்புடன் வேன்களில் எடுத்து செல்லப்பட்டன.
பட்டுகோட்டை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கும், ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், வேப்பத்தூர், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கும்பகோணத்தில் மயிலாடுதுறை சாலை நால் ரோடு அருகில் உள்ள லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன.
சீல் வைப்பு
அதேபோல் பேராவூரணி, பெருமகளூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பேராவூரணியில் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன.
நள்ளிரவு வரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அந்தந்த மையங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு தேர்தல் அதிகாரிகளால் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் பாதுகாப்பு
மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஒரு வாக்கு எண்ணும் மையத்திற்கு 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதாவது இவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு ஷிப்டில் மட்டும் 1 டி.எஸ்.பி தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ் பெக் டர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஆயுதப் படை போலீசார் என 44 பேர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடு கின்றனர். வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதற்காக அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் உள்ளது.
Related Tags :
Next Story