கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுக்கூர் அருகே குடும்ப தகராறில் மனைவி விஷம் குடித்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே குடும்ப தகராறில் மனைவி விஷம் குடித்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறு
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே அத்திவெட்டி சிவிக்காடு பகுதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது51). இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு ஹேம்நாத் என்ற மகன் உள்ளார். சச்சிதானந்தம் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சச்சிதானந்தம் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் குடும்பத்துடன் அத்திவெட்டி சிவிக்காட்டில் வசித்து வந்தார்.
விஷம் குடித்தார்
நேற்றுமுன்தினம் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜெயசித்ரா விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி விஷம் குடித்ததை அறிந்த சச்சிதானந்தம் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சச்சிதானந்தம் சகோதரர் விஜயராகவன் மதுக்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த சச்சிதானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறில் மனைவி விஷம் குடித்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story