முதல் முறையாக வாக்களித்த இளம் வாக்காளர்கள்
உள்ளாட்சி தேர்தலில் இளம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களித்தனர்.
நெல்லை;
உள்ளாட்சி தேர்தலில் இளம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களித்தனர்.
இளம் வாக்காளர்கள்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான இளம் வாக்காளர்கள் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் பதிவு செய்தனர். நெல்லை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் இளம் வாக்காளர்கள் அதிகளவு பங்கேற்று ஓட்டு போட்டனர்.
முதல் முறையாக ஓட்டு போட்ட பாளையங்கோட்டை மகாராஜ நகரை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி ஷெரின் கூறுகையில் “நான் முதல் முறையாக வாக்களிக்கிறேன். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு செய்தது புதுமையாக இருந்தது. தேர்தல் ஆணையம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் ஏற்பாடுகளை செய்திருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.
மகாராஜநகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஐடா மகிமா கூறுகையில், ‘‘தேர்தலில் ஜனநாயக கடமையை செய்து உள்ளேன். முதன் முதலாக வாக்களித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.
சிறப்பான நடவடிக்கை
நெல்லை டவுன் மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்த பாப்பா தெருவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ராதா கூறுகையில், ‘‘உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கிறேன். எங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த கவுன்சிலரை தேர்வு செய்வதற்காக இந்த தேர்தலில் வாக்களித்து உள்ளேன். வாக்குச்சாவடி தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்ததுடன், சமூக இடைவெளி, முககவசம், கையுறை ஆகியவற்றுடன் வாக்களிக்க ஏற்பாடு செய்திருந்தது சிறப்பான நடவடிக்கை ஆகும்’’ என்றார்.
நெல்லை அருகே உள்ள நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்த கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி முத்தமிழ் கூறுகையில், ‘‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களித்தது புதிய அனுபவமாக இருந்தது. ஜனநாயக கடமை ஆற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.
Related Tags :
Next Story