அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது; கலெக்டர் விஷ்ணு பேட்டி


அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது; கலெக்டர் விஷ்ணு பேட்டி
x
தினத்தந்தி 20 Feb 2022 2:01 AM IST (Updated: 20 Feb 2022 2:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்தது என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.

நெல்லை:
“நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்தது” என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.

அமைதியான வாக்குப்பதிவு
நெல்லை மாவட்டத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள 933 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடந்தது. அனைத்து பகுதியிலும் தேவையான அளவு போலீஸ் பாதுகாப்பு மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள், அனைத்து துறை அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
218 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவு நேரடி கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. 
அதிக பதற்றம் உள்ள 100 வாக்குச்சாவடிகளில் தேவையான கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 100 நுண்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

உற்சாகமாக...
ஏர்வாடி, மணிமுத்தாறு உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சிறிய அளவில் ஏற்பட்ட குறைபாடுகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டது. ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு கூடுதல் நேரம் தேவையில்லை.
நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சமீபத்தில் நடந்த கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் உற்சாகமாக வாக்களித்தது போல் இந்த தேர்தலிலும் பொதுமக்கள் உற்சாகமாக வாக்களிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவர் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது ஒரு பணியாளர் முககவசம் அணியாமல் இருந்ததை பார்த்து அவரை முககவசம் அணிந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டார்.

Next Story