தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பழுதடைந்த கட்டிடம்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் வட்டார கல்வி அலுவலகம் உள்ளது. தற்போது இந்த அலுவலக கட்டிடம் போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. ஆங்காங்கே கட்டிடம் பழுதடைந்து உள்ளது. எனவே, பழுதடைந்த இந்த அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.
ரேஷன்கடை மாற்றப்படுமா?
மதுரை பெத்தானியாபுரம் வி.பி.சிந்தன் தெரு, என்.எஸ்.கே. தெரு, மோதிலால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ரேஷன் கடை நீண்ட தூரத்தில் உள்ளது. அவர்கள் நீண்டதூரம் நடந்து சென்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே, ரேஷன்கடைைய வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரத்தில் வேலை முடிந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்தும் போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சில பகுதிகளில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதன் காரணமாக சாக்கடை கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே வீடுகளின் முன்பு தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் சிரமம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் உள்ள ராமநாதபுரம் கூட்டுறவு வங்கி முன்பு கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வங்கிக்கு வரும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இங்கு வரும் முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் செல்லும் பெண்கள் என அனைவரும் இதனை தாண்டிதான் கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?
விபத்து அபாயம்
மதுரை டவுன்ஹால் சாலையானது எப்போதும் மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்குள்ள சாலை ஆங்காங்கே, குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடப்பட்ட இரும்பு கம்பிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விபத்து அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story