1,519 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு


1,519 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 20 Feb 2022 2:06 AM IST (Updated: 20 Feb 2022 2:06 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1,519 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

சேலம்:-
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1,519 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
உள்ளாட்சி தேர்தல்
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டு உறுப்பினர்கள், 6 நகராட்சிகளில் 165 வார்டு உறுப்பினர்கள், 31 பேரூராட்சிகளில் 474 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 699 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மேச்சேரி பேரூராட்சி 11, 13-வது வார்டு உறுப்பினர்கள், தெடாவூர் பேரூராட்சியில் 7-வது வார்டு உறுப்பினர், கொளத்தூர் பேரூராட்சியில் 4-வது வார்டு உறுப்பினர் என மொத்தம் 4 பேர் (தி.மு.க.வை சேர்ந்தவர்கள்) ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள 695 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 3,206 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
இந்த தேர்தலில் ஒரு மாவட்ட தேர்தல் பார்வையாளர், 38 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 87 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இதுதவிர, வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்பட சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சேலம் மாநகராட்சி உள்பட மாவட்டம் முழுவதும் 1,519 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் மாலையில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களும் அவரவர் வாக்குச்சாவடிக்கு வந்து தயாராக இருந்தனர்.
இந்தநிலையில், நேற்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. ஒருசில வாக்குச்சாவடிகளில் மட்டும் ஓட்டுப்பதிவு மந்தமாக காணப்பட்டது. அதன்பிறகு வாக்காளர்கள் அதிகளவில் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்முடன் வாக்களிக்க தொடங்கினர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
உடல் வெப்பம் பரிசோதனை
சேலம் மாநகராட்சியை பொறுத்தவரையில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 709 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் மிகவும் ஆர்வமுடன் வந்து ஓட்டுப்போட்டு தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
அதாவது, ஓட்டு போடுவதற்கு முன்பு தெர்மல் ஸ்கேனர் மூலம் வாக்காளர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு கையில் சானிடைசர் தெளித்து, கையுறை வழங்கப்பட்டது. மேலும், முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வாக்குச்சாவடியில் இருந்த அலுவலர்கள் முககவசம் வழங்கினர்.
சாமியானா பந்தல்
வார்டுக்கு ஒரு மண்டல அலுவலர் வீதம் 60 பேர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கார்களில் தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வருவதற்கு சாய்தளம் வசதி செய்யப்பட்டிருந்தது. அதேபோல், வெயிலின் தாக்கம் காரணமாக நிழலுக்காக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தன.
இதே போல மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் 273 வாக்குச்சாவடிகளிலும், 31 பேரூராட்சிகளில்  537 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடந்தது.
ஆத்தூர், ஓமலூர்
ஆத்தூர், நரசிங்கபுரம், மேட்டூர், எடப்பாடி ஆகிய நகராட்சிகளில் சில வாக்குச்சாவடிகள் முன்பு சில அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி குரல் எழுப்பினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் தலையிட்டு தகராறு செய்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 
ஓமலூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டனர். இதே போல காடையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி, அரசிராமணி, அயோத்தியாப்பட்டணம், பேளூர், ஏத்தாப்பூர், கெங்கவல்லி, இளம்பிள்ளை, ஜலகண்டாபுரம், கன்னங்குறிச்சி, கருப்பூர், மேச்சேரி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
முதல்முறை.....
முதல்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் இடங்கணசாலை, தாரமங்கலம் ஆகிய நகராட்சிகளிலும் நேற்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். 
பேளூர் பேரூராட்சி 1-வது வார்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், வாக்குச்சாவடிக்கு மாலை 5 மணிக்கு மேல் கவச உடை அணிந்து வந்து வாக்களித்தார்.

Related Tags :
Next Story