பொதுமக்களின் அமைதியை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை; மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை
ஹிஜாப் விவகாரத்தில் பொதுமக்களின் அமைதியை கெடுப்பவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி அரக ஞானேந்திரா எச்சரித்துள்ளார்.
கலபுரகி: ஹிஜாப் விவகாரத்தில் பொதுமக்களின் அமைதியை கெடுப்பவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி அரக ஞானேந்திரா எச்சரித்துள்ளார்.
கலபுரகியில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு வேடிக்கை பார்க்காது
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் எழவில்லை. விரல் விட்டு எண்ணும் அளவிலான பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே ஹிஜாப் விவகாரம் நடந்து வருகிறது. ஹிஜாப் விவகாரம் தலை தூக்க காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எச்சரிக்கை விடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவர்களை போலீசார் கைது செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். 144 தடை உத்தரவை மீறிய மாணவிகள் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்காது.
கோர்ட்டு உத்தரவை மதிக்க...
சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக எனக்கு கடிதம் எழுதியுள்ளார். நான், அவர்களிடம் ஒன்றை மட்டுமே கூறி கொண்டுள்ளேன். ஹிஜாப் விவகாரத்தில் இருந்து அனைவரும் எந்த விதமான பிரச்சினையும் இன்றி வெளியே வர வேண்டும். இதற்காக அரசு மட்டுமின்றி, சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்தவர்களும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள் என்றால், அங்கு மாணவ, மாணவிகள் இடையே எந்த பேதமும் இருக்க கூடாது. பள்ளி, கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் சமமானவர்கள் தான். இந்த விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். சட்டத்திற்கு எதிராக யாரும் செயல்படக்கூடாது. சட்டத்திற்கு எதிராக இருப்பவர்களை கண்டிக்க வேண்டும்.
கடுமையான நடவடிக்கை
பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் ஜாதி, மதம் உள்ளிட்டவற்றை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஹிஜாப் விவகாரம் நிலவி வரும் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், அதையும் மீறி சட்டம்-ஒழுங்குக்கும், பொதுமக்களின் அமைதியை கெடுக்கும் விதமாகவும் நடந்து கொள்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியில் சில மதவாதிகள் இருக்கிறார்கள்.
மாணவ, மாணவிகளிடம் மதம் என்ற விதையை விதைக்க நினைக்கும் மதவாத சக்திகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஹிஜாப் விவகாரத்தில் விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால், இறுதி தீர்ப்புக்காக அரசும் காத்திருக்கிறது. பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த அமைப்பு மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதனை அரசு எடுக்கும்.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.
Related Tags :
Next Story