ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை-அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
மதுரை,
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
பேட்டி
மதுரை மாநகராட்சி காக்கைபாடினியார் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயகத்திற்கு விரோதமாக, ஊழலுக்காக ஆட்சி செய்த அ.தி.மு.க. தற்போது, ஜனநாயக முறையில் வெற்றி பெற்று பெரும்பான்மையோடு ஆட்சி செய்து கொண்டு இருக்கிற தி.மு.க. அரசை முடக்குவோம் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள கூடியதா?. ஒரே நாடு, ஒரே தேர்தல் எப்படி சாத்தியம் ஆகும். அடிப்படை அறிவு இருக்க வேண்டாமா?. ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு என்கிறார்கள். மதுரை பத்திரப்பதிவில் கடந்த கால ஆட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடந்து இருக்கிறது. கோவில் நிலங்களை எல்லாம் ஆக்கிரமிப்பு செய்து பதிவு செய்து இருக்கிறார்கள். மதுரையில் பத்திரப்பதிவு குறித்த தகவல்கள் போதவில்லை என்கிற போது, ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு எப்படி சாத்தியம்? சாத்தியமில்லை.
குஜராத்தில் இருந்து கொண்டு மதுரை கோவில் நிலத்தை பதிவு செய்தால் என்ன செய்ய முடியும். அறிவுகெட்ட தனமாக எதையாவது பேசி கொண்டு இருந்தால் என்ன செய்வது. தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக செல்லூர் ராஜூ கூறுகிறார். அவருக்கு தெரிந்ததை அவர் பேசலாம். ஒருவேளை அவர் பணம் கொடுத்து இருக்கலாம்.
பட்ஜெட்
ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டியது மாநிலம், மாவட்டம், உள்ளாட்சி அமைப்புகள். டெல்லியில் இருந்து எதையும் செய்து கொண்டு இருக்க முடியாது. தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு நிதி நிலை சரியாக இல்லை. இலக்காக காண்பிக்கப்பட்ட பட்ஜெட்டுக்கும், திருத்திய பட்ஜெட்டுக்கும் 30 சதவீதம் வேறுபாடு இருக்கிறது. அதனை மாற்றி வரும் காலத்தில் ஒழுங்கான பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். வருவாய் பற்றாக்குறையை திருத்துவோம். தீவிர சிகிச்சை செய்து பட்ஜெட்டை சீர் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story