மூத்த கன்னட நடிகர் ராஜேஷ் மரணம்
நடிகர் அர்ஜூனின் மாமனாரான மூத்த கன்னட நடிகர் ராஜேஷ் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சித்தராமையா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூரு: நடிகர் அர்ஜூனின் மாமனாரான மூத்த கன்னட நடிகர் ராஜேஷ் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சித்தராமையா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ராஜேஷ் மரணம்
கன்னட திரை உலகில் மூத்த நடிகராக இருந்து வந்தவர் ராஜேஷ். அவருக்கு வயது 89. வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜேஷ் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை ஐ.சி.யு.வில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல் உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்தன. இந்த நிலையில் நேற்று காலை தனியார் ஆஸ்பத்திரியிலேயே ராஜேஷ் மரணம் அடைந்தார்.
ராஜேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர்விட்டு அழுதனர். பின்னர் ராஜேசின் உடல் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, நடிகர் தொட்டண்ணா, நடிகையும், எம்.பி.யுமான சுமலதா உள்ளிட்ட கன்னட திரை உலகினர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அர்ஜூன் சர்ஜாவின் மாமனார்
மறைந்த ராஜேஷ் பிரபல நடிகர் அர்ஜூன் சர்ஜாவின் மாமனார் ஆவார். ராஜேசின் மகள் நிவேதிதாவை தான் அர்ஜூன் திருமணம் செய்து உள்ளார். ராஜேஷ் இறந்த செய்தி அறிந்ததும் சென்னையில் இருந்து அர்ஜூன், நிவேதிதா, அர்ஜூனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா ஆகியோர் பெங்களூருவுக்கு விரைந்து வந்தனர்.
கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த ராஜேசின் உடலுக்கு அர்ஜூன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி இருந்தார். திரை உலகினர், குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ராஜேசின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
கவுரவ டாக்டர் பட்டம்
ராஜேசின் இயற்பெயர் முனிசவுடப்பா என்கிற வித்யாசாகர் ஆகும். இவர் கடந்த 1964-ம் ஆண்டு வெளியான வீரசங்கல்ப என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். 1968-ம் ஆண்டு நம்ம ஊரு படத்தில் அவர், ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அவர் தனது பெயரை ராஜேஷ் என்று மாற்றி கொண்டார்.
1964 முதல் 1991 வரை அவர் 63 படங்களில் கதாநாயகான நடித்து உள்ளார்.
மேலும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளனர். அவர் மொத்தம் 150 படங்களில் நடித்து உள்ளார். 2012-ம் ஆண்டு கர்நாடக பல்கலைக்கழகம் ராஜேசுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருந்தது. 2014-ம் ஆண்டு டாக்டர் ராஜ்குமார் கலாசார அறக்கட்டளை சார்பில் ராஜேசுக்கு, கன்னட சாகித்ய பரிஷத் விருதுவும் வழங்கப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story