பேரூராட்சிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு; மாநகராட்சி-நகராட்சிகளில் மந்தம்
மதுரை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. ஆனால் மாநகராட்சி-நகராட்சிகளில் மந்தமான வாக்குப்பதிவு இருந்தது.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. ஆனால் மாநகராட்சி-நகராட்சிகளில் மந்தமான வாக்குப்பதிவு இருந்தது.
313 பதவிகள்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகளில் 78 வார்டுகள், பரவை, அலங்காநல்லூர், பாலமேடு, ஏ.வெள்ளாளபட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி, தே.கல்லுப்பட்டி, பேரையூர் மற்றும் எழுமலை என 9 பேரூராட்சிகளில் உள்ள 135 கவுன்சிலர்கள் என மொத்தம் 313 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க. 262 பதவிகளுக்கும், அ.தி.மு.க. 308, பாரதிய ஜனதா- 233, காங்கிரஸ்-24, தே.மு.தி.க.-79, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-12, இந்திய கம்யூனிஸ்டு-5, அ.ம.மு.க.-170, நாம் தமிழர் கட்சி-162, மக்கள் நீதி மய்யம்-93, சுயேச்சைகள் 335 பேர் உள்பட மொத்தம் 1,711 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலுக்காக 1,615 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்பட இதர பொருட்கள் நேற்று முன்தினம் இரவே வாக்குச்சாவடி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தன. தேர்தல் பணியில் 7 ஆயிரத்து 760 ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 15 லட்சத்து 78 ஆயிரத்து 136 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இதில் ஆண்கள் 7 லட்சத்து 73 ஆயிரத்து 532 பேர், பெண்கள் 8 லட்சத்து 4 ஆயிரத்து 452 பேர், இதரர் 152 பேர் ஆகும்.
திருவிழா கூட்டம்
நேற்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாநகராட்சி பகுதிகளில் மிகவும் மந்தமாக இருந்தது. அதனால் வாக்குச்சாவடி மையங்கள் வெறிச்சோடி இருந்தன. ஆனால் வாக்குச்சாவடிக்கு சற்று தள்ளி நின்று அதிகளவில் கட்சியினர் திரண்டு இருந்தனர். அவர்கள் வாக்களித்த வந்தவர்களுக்கு பூத் சிலிப் மற்றும் எந்த மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற தகவலை தெரிவித்தப்படி இருந்தனர். மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளாக உள்ள ஆனையூர், திருப்பரங்குன்றம் பகுதிகள், வில்லாபுரம் ஆகிய பகுதிகளில் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. நகரின் மையத்தில் அமைந்து இருந்த வாக்குச்சாவடி மையங்கள் வெறிசோடி காணப்பட்டன. நேரம் செல்ல, செல்லவும் கூட்டம் அதிகம் வரவில்லை. மாநகராட்சியை பொறுத்தவரை வாக்குப்பதிவு மிகவும் மந்த நிலையிலேயே தான் இருந்தது. அதே போல் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய நகராட்சிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.
பேரூராட்சிகளில் விறுவிறுப்பு
ஆனால் அதற்கு நேர்மாறாக பேரூராட்சிகளில் மக்கள் திருவிழாவிற்கு திரள்வது போல் வாக்குச்சாவடி மையங்களில் திரண்டனர். ஒவ்வொரு பேரூராட்சி வாக்குச்சாவடியிலும் கூட்டம் அதிகம் இருந்தது. வாக்குச்சாவடிக்கு வந்த பொதுமக்களை முகவர்கள் வரவேற்று அவர்களுக்கு பூத் சிலிப் வழங்கி வழிகாட்டினர். சில வாக்குச்சாவடிகளில் பகல் 1 மணியளவில் அதிகளவில் மக்கள் வாக்களித்து சென்று விட்டனர். அதனால் பிற்பகலுக்கு பிறகு அந்த வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி இருந்தது. பேரூராட்சிகளில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்த காட்சியை காண முடிந்தது. பேரூராட்சிகளை பொறுத்தவரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
Related Tags :
Next Story