வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க 45 நுண் பார்வையாளர்கள் நியமனம்


வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க 45 நுண் பார்வையாளர்கள் நியமனம்
x
தினத்தந்தி 20 Feb 2022 7:45 PM IST (Updated: 20 Feb 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க 45 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க 45 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்கள்

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, பின்னர் எந்திரங்களில் பதிவான வாக்குகள் வார்டு வாரியாக எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. ஓவேலி பேரூராட்சி, கூடலூர் நகராட்சிகளுக்கு கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழ்குந்தா பேரூராட்சி, பிக்கட்டி பேரூராட்சிகளுக்கு மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையங்களாகவும், பிற இடங்களுக்கு தனித்தனியாகவும் மையங்கள் உள்ளது.

அதிகரட்டி பேரூராட்சி

ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகளில் பதிவான வாக்குகள் 9 சுற்றுகளாகவும், குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகளில் பதிவான வாக்குகள் 4 சுற்றுகள், கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகளில் 11 சுற்றுகள், நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகளில் 5 சுற்றுகளாக எண்ணப்படுகிறது.  அதிகரட்டி பேரூராட்சியில் 17 வார்டுகளில் 6 சுற்றுகள், பிக்கட்டி பேரூராட்சியில் 14 வார்டுகளில் 8 சுற்றுகள், தேவர்சோலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் 6 சுற்றுகள், உலிக்கல் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 9 சுற்றுகள், ஜெகதளா பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 சுற்றுகள், கேத்தி பேரூராட்சியில் 17 வார்டுகளில் 5 சுற்றுகள், கோத்தகிரி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 7 சுற்றுகள், கீழ்குந்தா பேரூராட்சியில் 21 வார்டுகளில் 8 சுற்றுகள், நடுவட்டம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது.

நுண் பார்வையாளர்கள்

ஓவேலி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 6 சுற்றுகள், சோலூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 61 மேஜைகள் போடப்பட்டு உள்ளது. ஒரு மேஜையில் ஒரு வாக்கு எண்ணும் அலுவலர், உதவியாளர், மேற்பார்வையாளர் என 3 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணும் பணிகளை மேற்பார்வையிடவும், கண்காணிக்கவும் ஒரு வாக்கு எண்ணும் மையத்துக்கு நுண் பார்வையாளர்கள் தலா 3 பேர் என மொத்தம் 45 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணும் பணி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. 

ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் வரும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வாகனங்கள் நிறுத்த மைதானத்தில் அனுமதி இல்லை. அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாளை (திங்கட்கிழமை) வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story