மேகமலை அருவிக்கு செல்ல 2 சோதனை சாவடிகளில் கட்டணம் வசூல் சுற்றுலா பயணிகள் அதிருப்தி
மேகமலை அருவிக்கு செல்ல 2 சோதனை சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டு அருகே கோம்பைதொழுவில் மேகமலை அருவி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
தற்போது அருவியில் குறைந்த அளவில் மட்டுமே நீர்வரத்து உள்ளது. எனினும் அருவியில் குளிக்க தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மேகமலை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சோதனைச்சாவடி சார்பில் தலா ரூ.30 வீதம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
அதிருப்தி
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகமலை அருவிக்கு செல்லும் சாலையின் இடையே கோம்பைத்தொழு ஊராட்சி சார்பில் புதிதாக சோதனை சாவடி அமைக்கப்பட்டது. இந்த சோதனைசாவடி வழியாக அருவிக்கு செல்லும் ஆட்டோவிற்கு ரூ.25, காருக்கு ரூ.50, பஸ்சிற்கு ரூ.100 வீதம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வசூல் செய்யப்படுகிறது.
இவ்வாறு அருகருகே 2 சோதனைசாவடிகள் அமைத்து கட்டணம் வசூல் செய்வது சுற்றுலா பயணிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லை
இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
கோம்பைத்தொழு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் உள்ளிட்ட எந்த வசதியும் செய்யப்படவில்லை. இதேபோல அருவியில் வனத்துறை சார்பிலும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் அருவியில் தடுப்பு கம்பிகள், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் நின்று குளிக்க வேண்டிய நிலை உள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் பெண்கள் அருவியில் குளிப்பதற்கு அச்சப்படுகின்றனர். அருவி அருகே அமைந்துள்ள பெண்கள் உடை மாற்றும் அறை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இவ்வாறு எவ்வித அடிப்படை வசதிகளும் மேம்படுத்தாமல் 2 இடங்களில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாக்குவாதம்
இதற்கிடையே 2 இடங்களில் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மேகமலை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேகமலை அருவியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்றும், சோதனை சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதை முறைப்படுத்த வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story