பல்லடம் அருகே ஓடும் பஸ்சில் முன் பக்க சக்கரம் கழன்று ஓடியது


பல்லடம் அருகே ஓடும் பஸ்சில் முன் பக்க சக்கரம் கழன்று ஓடியது
x
தினத்தந்தி 20 Feb 2022 9:36 PM IST (Updated: 20 Feb 2022 9:36 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே ஓடும் பஸ்சில் முன் பக்க சக்கரம் கழன்று ஓடியது

பல்லடம்:
பல்லடம் அருகே ஓடும் பஸ்சில் முன் பக்க சக்கரம் கழன்று ஓடியது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் காயம் இன்றி தப்பினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பஸ் சக்கரம் கழன்று ஓடியது
நெல்லையில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் காமராஜ் (வயது 40) ஓட்டி வந்தார்.
அந்த பஸ் பல்லடம் அருகே துத்தாரிபாளையம் பகுதியில் வந்த போது பஸ்சின் முன்பக்க சக்கரம் திடீரென்று கழன்று ஓடியது. பின்னர் அந்த சக்கரம் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விழுந்தது.
பஸ் சக்கரம் கழன்று ஓடியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் காமராஜ், உடனடியாக பஸ்சை நடுரோட்டிலேயே  நிறுத்தினார். இதில் பஸ்சில் இருந்த 47 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
போதிய பராமரிப்பு இல்லை 
இதையடுத்து கிரேன் கொண்டு வரப்பட்டு அந்த பஸ் அப்புறப்படுத்தப்பட்டது. இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இது குறித்து பஸ்சில் வந்த பயணிகள் கூறுகையில் “அரசு பஸ்கள் போதிய பராமரிப்பு இன்றி மிக மோசமான நிலையில் உள்ளது. அதனால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. நாங்கள் வந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பினோம்” என்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடுமுடியில் இருந்து கோவை நோக்கி சென்ற பஸ்சில் கதவுகள் பழுதடைந்து கட்டி வைக்கப்பட்டு விபத்து ஏற்படும் அபாய நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story