14 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
கடலூர் மாவட்டத்தில் 14 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு முடிந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்தந்த மண்டல அலுவலர்கள் தலைமையில் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி, அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சீல் வைப்பு
அதன்படி கடலூர் மாநகராட்சிக்கு மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்திற்கும், நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளிக்கும், பண்ருட்டி நகராட்சிக்கு அங்குள்ள சுப்புராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், சிதம்பரம் நகராட்சிக்கு ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்திற்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது.
விருத்தாசலம் நகராட்சிக்கு கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியிலும், வடலூர் நகராட்சி, குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திட்டக்குடி நகராட்சி, பெண்ணாடம் பேரூராட்சிக்கு திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்திலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
14 வாக்கு எண்ணும் மையங்கள்
இது தவிர அண்ணாமலைநகர் பேரூராட்சிக்கு வாக்கு எண்ணும் மையமான ராணிசீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளியிலும், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை பேரூராட்சிகளுக்கு உடையார்குடி பருவதராஜகுருகுல மேல்நிலைப்பள்ளியிலும், புவனகிரி, பரங்கிப்பேட்டை பேரூராட்சிகளுக்கு புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மங்கலம்பேட்டை, கெங்கைகொண்டான் ஆகிய பேரூராட்சிகளுக்கு மங்கலம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிகளுக்கு தேவங்குடி கோபாலகிருஷ்ணன் மழவராயர் மேல்நிலைப்பள்ளியிலும், தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிகளுக்கு புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கிள்ளை பேரூராட்சிக்கு கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்குள்ள பாதுகாப்பு அறைக்குள் வார்டு வாரியாக எண்கள் எழுதப்பட்டு, அந்தந்த வார்டுகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டது.
3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
அந்த அறைகள் தேர்தல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளின் கதவு, ஜன்னல்கள் பூட்டப்பட்டு பலகையால் அடைக்கப்பட்டது. அந்த அறைகள் முன்பு தமிழ்நாடு சிறப்புகாவல் படையை சேர்ந்த போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு அடுத்ததாக அந்த வளாகத்தை சுற்றிலும் ஆயுதப்படை போலீசாரும், வெளிப்புறத்தில் உள்ளூர் போலீசாரும் என மொத்தம் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே வெளி ஆட்கள் யாரும் செல்லாதபடி தடுப்பு கட்டைகள் கொண்டு அடைத்து, அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளை சுற்றிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய போலீசார்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறை, வாக்கு எண்ணும் அறைகளில் மொத்தம் 83 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாநகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர், இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, தேவேந்திரன், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 20 போலீசார், 8 துப்பாக்கி ஏந்திய அதிரடி படை போலீசார் என 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story