காரில் கடத்திய 140 கிலோ கஞ்சா பறிமுதல்


காரில் கடத்திய 140 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 20 Feb 2022 9:51 PM IST (Updated: 20 Feb 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே காரில் கடத்திய 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நத்தம்: 


 நிற்காமல் சென்ற கார்
சிவகங்கை-திண்டுக்கல் மாவட்ட எல்லையில், நத்தம் அருகே சமுத்திராபட்டியில் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது, சிவகங்கையில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஒரு கார் மின்னல் வேகத்தில் வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அது நிற்காமல் சென்றது. இதுதொடர்பாக சோதனைச்சாவடியில் உள்ள போலீசார், நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

7 மூட்டைகள் 
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையில், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, சேக்தாவூது, கார்த்திக் மற்றும் போலீசார், நத்தம் அவுட்டர் பகுதியில் குறிப்பிட்ட எண்களை கொண்ட அந்த காரை கண்காணித்து வந்தனர். சிறிதுநேரத்தில் அந்த கார் அங்கு வந்தது. 
இதனையடுத்து அந்த காரை போலீசார் வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது காருக்குள் 7 மூட்டைகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்தபோது, மூட்டைக்குள் கஞ்சா இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

 140 கிலோ கஞ்சா
இதுதொடர்பாக காரில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்த குணசேகரன் (வயது 38), அழகு (35) என்று தெரியவந்தது.
மேலும் அவர்கள் ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் கஞ்சாவை கடத்தி சென்றதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் 7 மூட்டைகளில் இருந்த 140 கிலோ கஞ்சா மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சா கடத்தலில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 
இதற்கிடையே காரில் கடத்திய கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பாராட்டினார்.

Related Tags :
Next Story