கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகற்கள் ஆய்வு


கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகற்கள் ஆய்வு
x
தினத்தந்தி 20 Feb 2022 10:03 PM IST (Updated: 20 Feb 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகற்களை வரலாற்று குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி:
நடுகற்கள்
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், கிருஷ்ணகிரி அருகில் உள்ள கல்லுகுறுக்கியில் இருந்து சாமந்தமலை செல்லும் வழியில் உள்ள ராமாயணபள்ளியில் ஆய்வு பணிக்காக சென்றனர்.
அப்போது அங்கு கோவிலின் முன் 3 நடுகற்கள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் 2 நடுகற்களுக்கு அழகாக வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. முதலாவது நடுகல்லில் வண்ணம் தீட்டப்படவில்லை.
இது குறித்து கிருஷ்ணகிரி அரசு அருகாட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
போரில்...
முதலாவது நடுகல், போரில் இறந்த வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. இறப்புக்கு பின் அவருடைய 2 மனைவிகளும் அவனோடு உடன்கட்டை ஏறி இறந்திருக்கிறார்கள். 2-வது நடுகல், சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வீரன் புலியோடு சண்டையிட்டு இறக்கிறான். புலியும் இறந்துவிடுகிறது. இது புலிகுத்திப்பட்டான் கல் ஆகும்.
அவன் இறந்தபின் அவனுடைய 2 மனைவிகளும் அவனை எரிக்கும் சிதையில் பாய்ந்து உயிர் துறக்கிறார்கள். இந்த நடுகல்லில், 2 வேட்டை நாய்கள் காட்டப்பட்டுள்ளது. அந்த காலத்தில் வேட்டைக்கு நாய்களையும் பயன்படுத்தி இருப்பதை உறுதி செய்கின்றது. கீழே வில்லும், மேலே அம்புகள் காட்டப்பட்டுள்ளன. 3-வது நடுகல், பூசலில் இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் ஆகும். வீரனின் 2 மனைவிகளும் உடன்கட்டை ஏறி இறந்துள்ளனர். 
500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது 
இந்த நடுகற்கள், விஜயநகர காலத்து நடுகற்கள் ஆகும். ஏறக்குறைய 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த 3 நடுகற்களிலும் கிளி பொறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிலும் 2 கிளிகள் உள்ளன. இவை வளமையின் சின்னமாக கருதப்படுகின்றது.
2 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதையுண்ட இந்த நடுகற்களை எடுத்து அனுமன் கோவிலின் எதிரே ஊர்மக்கள் வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு பணியில் குழு தலைவர் நாராயணமூர்த்தி, மனோகரன், விஜயகுமார், ரவி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் ஈடுபட்டனர்.

Next Story