வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 20 Feb 2022 10:03 PM IST (Updated: 20 Feb 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி:
ஓட்டு எண்ணிக்கை 
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் காவேரிப்பட்டணம், பர்கூர், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், காவேரிப்பட்டணம், பர்கூர், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓசூர் மாநகராட்சிக்கு ஓசூர் அரசு கலைக்கல்லூரியிலும், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூராட்சிகளுக்கு தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
3 அடுக்கு பாதுகாப்பு 
இந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி பாலிடெக்னிக்கில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை, கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ள 2 அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் சுழற்சி முறையில் பாலிடெக்னிக்கில் 85 போலீசாரும், கலைக்கல்லூரியில் 100 போலீசாரும் என மொத்தம் 185 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு பணிகள்
ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகளை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விஜயராகவன் (கிருஷ்ணகிரி), தங்கவேல் (பர்கூர்), இன்ஸ்பெக்டர்கள் கபிலன் (கிருஷ்ணகிரி டவுன்), அன்புமணி (குருபரப்பள்ளி), சரவணன் (கிருஷ்ணகிரி தாலுகா), பிரபாவதி (போச்சம்பள்ளி), செல்வராஜ் (சிங்காரப்பேட்டை), முருகன் (மத்தூர்) ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

Next Story