வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு பலத்த பாதுகாப்பு


வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 20 Feb 2022 10:03 PM IST (Updated: 20 Feb 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

3 இடங்களில் வாக்கு எண்ணிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம், வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 6 நகராட்சிகள், கலவை, திமிரி, விளாப்பாக்கம், அம்மூர், காவேரிபாக்கம், பனப்பாக்கம், நெமிலி, தக்கோலம் ஆகிய 8 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. நகராட்சி பகுதிகளில் 289 வாக்குச் சாவடிகள், பேரூராட்சி பகுதிகளில் 122 வாக்குச் சாவடிகள் என மொத்தம் உள்ள 411 வாக்குச்சாவடிகளில் வாக்குகள் பதிவான எந்திரங்கள் அரசியல் கட்சிகளின் முகவர்கள், போலீசார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

பின்னர் ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம், சோளிங்கர், வாலாஜா ஆகிய 5 நகராட்சிகளின் வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வாகனம் மூலம் வாக்கு எண்ணும் மையமான வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டது.

அதேபோல் அரக்கோணம் நகராட்சியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அரக்கோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டது. கலவை, திமிரி, விளாப்பாக்கம், அம்மூர், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி, தக்கோலம் ஆகிய 8 பேரூராட்சிகளின் வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு எந்திரங்கள் தென் கடப்பந்தாங்கலில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டது.

போலீ்ஸ் பாதுகாப்பு

பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் இந்த 3 மையங்களிலும் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. அதனை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டு, பாதுகாப்பு அறையை பூட்டி சீல் வைத்தனர். 3 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Next Story