விழுப்புரம் மாவட்டத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான தேர்தல் விறு விறுப்பாக நடந்து முடிந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 72.39 சதவீத வாக்குகள் பதிவாகின. இருப்பினும் வாக்குப்பதிவின் போது ஒரு சில இடங்களில் கள்ள ஓட்டு போட்டது, பணப்பட்டுவாடா செய்தது மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தது தொடர்பாக பிரச்சினைகள் ஏற்பட்டது.
வாக்கு எண்ணும் மையம்
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக அந்தந்த வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன்படி விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதன் வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள இ.எஸ். கலை அறிவியல் கல்லூரிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது.
பூட்டி சீல் வைப்பு
இதேபோல் திண்டிவனம் நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான திண்டிவனம் புனித அன்னாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டக்குப்பம் நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை புயல் பாதுகாப்பு மைய கட்டிடம், அனந்தபுரம் பேரூராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் தளம், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான டி.தேவனூர் ஸ்ரீலட்சுமி வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளி, செஞ்சி பேரூராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தரைத்தளம், மரக்காணம் பேரூராட்சிக்கான மரக்காணம் மேலவீதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான திருவெண்ணெய்நல்லூர் காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளி, வளவனூர் பேரூராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, விக்கிரவாண்டி பேரூராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான விக்கிரவாண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அந்தந்த நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
பின்னர் அங்கு அதிகாரிகள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வகை்கப்பட்டிருந்த அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
மேலும் அந்த அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், உள்ளூர் போலீசார் அடங்கிய 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது. மேலும் வாக்குப்பதிவின் முடிவுகள் அறிவிக்க தேவையான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலின் இறுதி முடிவு நாளை மாலைக்குள் தெரியவரும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story