நாமக்கல் மாவட்டத்தில் 3 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


நாமக்கல் மாவட்டத்தில் 3 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 20 Feb 2022 10:16 PM IST (Updated: 20 Feb 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 3 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 3 மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
வாக்கு எண்ணும் மையங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று முன்தினம் இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி நாமக்கல் நகராட்சி, எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மோகனூர், பாண்டமங்கலம், பரமத்தி, பொத்தனூர், சேந்தமங்கலம், பரமத்திவேலூர் மற்றும் வெங்கரை பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கும், ராசிபுரம் நகராட்சி, அத்தனூர், பட்டணம், பிள்ளாநல்லூர், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிகள் மற்றும் மல்லசமுத்திரம், படைவீடு, ஆலாம்பாளையம் பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
500 போலீசார் பாதுகாப்பு
3 வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் அந்த அறைகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் 3 மையங்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இப்பணியில் சுமார் 200 பேர் ஈடுபட உள்ளனர். இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் மேஜை, பார்வையாளர்களுக்கான தடுப்புகள் அமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. வெற்றி பெற்ற நபர்களின் விவரத்தை அறிவிக்க ஒலிபெருக்கி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர முகவர்கள் அமரும் இடம், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது.
சுற்றுகள் விவரம்
நகராட்சிகளை பொறுத்த வரையில் பள்ளிபாளையம் நகராட்சிக்கு 6 மேஜைகளும், இதர நகராட்சிகளுக்கு தலா 8 மேஜைகளும் வாக்கு எண்ணிக்கைக்கு போடப்பட்டு உள்ளன. நாமக்கல் நகராட்சியில் பதிவான வாக்குகள் 13 சுற்றுகளாகவும், ராசிபுரம் நகராட்சியில் 6 சுற்றுகளாகவும், குமாரபாளையம் நகராட்சியில் 9 சுற்றுகளாகவும், பள்ளிபாளையம் நகராட்சியில் 7 சுற்றுகளாகவும், திருச்செங்கோடு நகராட்சியில் 11 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
பேரூராட்சிகளை பொறுத்த வரையில் பரமத்திவேலூர் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் 3 மேஜைகளிலும், இதர பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் தலா 2 மேஜைகளிலும் எண்ணப்பட உள்ளன. ஆலாம்பாளையம் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் 12 சுற்றுகளாகவும், நாமகிரிப்பேட்டையில் பதிவான வாக்குகள் 11 சுற்றுகளாகவும், சேந்தமங்கலத்தில் பதிவான வாக்குகள் 10 சுற்றுகளாகவும், மல்லசமுத்திரம், மோகனூர், பொத்தனூர், பரமத்திவேலூர் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் தலா 9 சுற்றுகளாகவும், அத்தனூர், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, படைவீடு, பிள்ளாநல்லூர், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, வெங்கரை மற்றும் வெண்ணந்தூர் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் தலா 8 சுற்றுகளாகவும், பரமத்தி, பட்டணம் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் தலா 7 சுற்றுகளாகவும், பாண்டமங்கலம் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் 6 சுற்றுகளாகவும் எண்ணப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story