பரமத்திவேலூர் அருகே இருபிரிவினர் தகராறு; 3 பேருக்கு கத்திக்குத்து கிராம மக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு


பரமத்திவேலூர் அருகே இருபிரிவினர் தகராறு; 3 பேருக்கு கத்திக்குத்து கிராம மக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2022 10:16 PM IST (Updated: 20 Feb 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே இருபிரிவினர் தகராறில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதனால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே இருபிரிவினர் தகராறில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதனால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூலித்தொழிலாளர்கள்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள உழவர்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவருடைய மகன் ஜீவா (24). அதே ஊரை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். இந்த நிலையில் நேற்று 3 பேரும் வேலைக்கு சென்று விட்டு ‌‌நன்செய் இடையாற்றில் இருந்து உழவர்பட்டிக்கு செல்ல பரமத்திவேலூர் அருகே உள்ள பொய்யேரிக்கு வந்துள்ளனர்.
அப்போது பொய்யேரியில் சாலையை மறித்து கொண்டு‌ நின்று கொண்டிருந்த நன்செய் இடையாற்றை சேர்ந்த 4 பேருக்கும், முருகேசன், ஜீவா மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ‌இதில் வாக்குவாதம் முற்றவே நன்செய் இடையாற்றை சேர்ந்த 4 பேரும் சேர்ந்து முருகேசன், ஜீவா மற்றும் ‌‌‌மணிகண்டன் ஆகியோரை கோழி சண்டைக்கு பயன்படுத்தும் கத்தியால் குத்தினர். 
சாலை மறியல்
இதில் காயம்‌ அடைந்த 3 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் காயமடைந்தவர்களின் கிராமமான உழவர்பட்டியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நன்செய் இடையாறை சேர்ந்த 4 பேரையும் கைது செய்து‌ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரமத்திவேலூர் காமராஜர் சிலை அருகே திரண்டனர்.
பின்னர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன், வேலூர் மற்றும் பரமத்தி இன்ஸ்பெக்டர்கள் வீரம்மாள் மற்றும் சுரேஷ் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
போக்குவரத்து பாதிப்பு
இது ஒருபுறம் இருக்க சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் திடீரென பரமத்திவேலூர் காவிரி பாலம் பகுதிக்கு சென்று அங்கு கரூர்- நாமக்கல் பைபாஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் கத்தியால் குத்தியதாக கூறப்படும் நன்செய் இடையாறைச் சேர்ந்த 4 பேரையும் கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். 
இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து பாதித்ததோடு, அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story