குழந்தையை தூங்க வைக்கும் தொட்டில் துணியால் தூக்கிட்டு பெண் தற்கொலை
குளித்தலை அருகே குடும்ப தகராறில் குழந்தையை தூங்க வைக்கும் தொட்டில் துணியால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குளித்தலை
குடும்ப தகராறு
குளித்தலை அருகே உள்ள கணக்கப்பிள்ளையர் பகுதியைச் சேர்ந்தவர் அபினேஷ் (வயது 33). இவருக்கும் தோகைமலை அருகே உள்ள ஆர்ச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா (24) என்பவருக்கும் கடந்த 2½ வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மித்திரன் என்ற ஒரு வயது மகன் உள்ளான். அபினேஷ் தனியார் ஐ.டி கம்பெனியில் தலைமை பொறியாளராக வேலை செய்து வந்துள்ளார். கொரோனா காலமென்பதால் சரியாக வேலை கிடைக்காததால் போதுமான வருமானம் இன்றி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். மேலும் அதிக கடன் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோல நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு நடந்துள்ளது.
தற்கொலை
இந்தநிலையில் அபினேஷ் நேற்று காலை எழுந்து பார்த்தபோது கீர்த்திகா குழந்தையை தூங்க வைக்கும் தொட்டில் துணியில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து அவர் அங்கே இருந்தவர்கள் உதவியுடன் கீர்த்திகாவை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கீர்த்திகா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கீர்த்திகாவின் அண்ணன் ராமசாமி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் திருமணமாகி 2½ வருடத்தில் கீர்த்திகா தற்கொலை செய்து கொண்ட காரணத்தினால் இதுகுறித்து குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story