கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சிகள் 5 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் நாளை(சனிக்கிழமை) எண்ணப்படுவதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி
185 வாக்குச்சாவடி மையங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 3 நகராட்சிகள், சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், மணலூர்பேட்டை, வடக்கனந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 141 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் 185 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 522 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 56,351 ஆண் வாக்காளர்கள், 61,186 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 14 பேர் என மொத்தம் 1,17,551 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்கள்
வாக்குப்பதிவு முடிந்தவுடன் கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் சங்கராபுரம் பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் பாரதி மகளிர் கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள வைப்பு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்து அறையை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சின்னசேலம், வடக்கனந்தல் ஆகிய பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மேலூர் டி.எஸ்.எம்.ஜெயின் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும், உளுந்தூர்பேட்டை நகராட்சி மற்றும் தியாகதுருகம் பேரூராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்திலும், திருக்கோவிலூர் நகராட்சி மற்றும் மணலூர்பேட்டை பேரூராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் திருக்கோவிலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
வாக்கு எண்ணிக்கை நாளை(செவ்வாய்கிழமை)நடைபெற உள்ளதை அடுத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஜய்கார்த்திக்ராஜா, ஜவஹர்லால், சுப்ராயன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் என ஒரு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 200 போலீசார் வீதம் 4 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கை மைய வளாகம், வாக்குகள் எண்ணும் அறை போன்ற முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story