அரிமளம் அருகே கீழப்பனையூர் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்


அரிமளம் அருகே கீழப்பனையூர்  காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 20 Feb 2022 11:26 PM IST (Updated: 20 Feb 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

அரிமளம் அருகே கீழப்பனையூர் காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அரிமளம்:
காமாட்சி அம்மன் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கீழப்பனையூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு கோவில் கும்பாபிஷேக விழா நடத்த விழா கமிட்டியினர் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கோமாதா பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவற்றுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மாலை 5 மணிக்கு மேல் இரவு 8.30 மணிக்குள் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
19-ந்தேதி 2-ம் கால யாகசாலை நடைபெற்றது. மாலையில் 3-ம் கால யாக பூஜை நடை பெற்றது. நேற்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, லட்சுமி பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை மகா பூர்ணாகுதி நடைபெற்றது. 
கும்பாபிஷேகம்
அதனை தொடர்ந்து காலை 10.15 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து சிவாச்சாரியார்கள் மேள தாளம் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமான கோபுரங்களில் உள்ள கலசங்களில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. 
தெப்ப உற்சவம்
அதனை தொடர்ந்து காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் காமாட்சி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் இரவு காமாட்சி அம்மன் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 
இதையடுத்து யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தார். அப்போது பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள் 
கும்பாபிஷேக விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், மானாமதுரை ஞானசேகர சுவாமிகள், தொழிலதிபர் எஸ். ராமச்சந்திரன், ஆலய நிர்வாகி எம்.எஸ்.எம். சோமு, அரிமளம் ஒன்றிய குழுத்தலைவர் மேகலாமுத்து, திருமயம் தாசில்தார் பிரவீனா மேரி, அரிமளம் மளிகை கடை மணி, சுரேஷ், தி.மு.க. தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்துக்குமார், அரிமளம் எம்.எஸ்.எம். பழம், வடக்கு குடியிருப்பு முருகன், கீழபனையூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் ராமசாமி, பெட்ரோல் பங்க் தமிழ் இனியன், தொழிலதிபர் ராயவரம் ராமநாதன், கணேஷ் எண்டர்பிரைசஸ் மதியழகன், என்ஜினீயர் ஞானசேகரன், ஓணாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், கார்த்திக் ப்ளோ கண்ட்ரோல் நேரு பிள்ளை மற்றும்  அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி சோமு, காமாட்சியம்மன் கோவில் பூசாரிகள், நாடார்கள், ஊர் அம்பலகாரர்கள் கீழப்பனையூர் கிராமத்தார்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Next Story