திருமணமான 3 மாதத்தில் கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான 3 மாதத்தில் கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Feb 2022 11:39 PM IST (Updated: 20 Feb 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் திருமணமான 3 மாதத்தில் கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் மனம் உடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

வேலூரில் திருமணமான 3 மாதத்தில் கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் மனம் உடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி நடத்தையில் சந்தேகம்

வேலூர் சலவன்பேட்டை அம்மனாங்குட்டை சாலையை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 23). இவருடைய பெற்றோர் 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். அதையடுத்து அவருடைய பாட்டி சரோஜினியின் பராமரிப்பில் ஆர்த்தி வளர்ந்துள்ளார். 

கடந்தாண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி ஆர்த்திக்கும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி இரும்பேடு பகுதியை சேர்ந்த மோகனுக்கும் இருவீட்டார் சம்மதத்தின்பேரில் திருமணம் நடந்தது.
கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கணவர் மோகனுடன் ஆர்த்தி வேலூருக்கு வந்தார். ஓரிருநாட்களுக்கு பின்னர் மோகன் மட்டும் திரும்பி விட்டார். ஆர்த்தி மேலும் சில நாட்கள் பாட்டி வீட்டில் தங்கி உள்ளார். 

அப்போது மனைவியின் நடத்தையில் மோகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் செல்போனில் பேசும் போதெல்லாம் ஆர்த்தியின் நடத்தையை சந்தேகப்பட்டு பேசி உள்ளார். அதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனிடையே மோகன் கடந்த 4-ந் தேதி விவகாரத்து கேட்டு ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான அவர் குடும்பத்தினரிடம் சரிவர பேசாமல் தனியாக இருந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆர்த்தி வீட்டு மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் உதவியுடன் குடும்பத்தினரஎஅவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆர்த்தி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து சரோஜினி அளித்த புகாரின்பேரில் வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமான 3 மாதத்திலேயே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் இளம்பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story