ஊரக உள்ளாட்சி தேர்தலைவிட நகர்ப்புற தேர்தலில் 12.67 சதவீத வாக்குகள் குறைவாக பதிவு


ஊரக உள்ளாட்சி தேர்தலைவிட நகர்ப்புற தேர்தலில் 12.67 சதவீத வாக்குகள் குறைவாக பதிவு
x
தினத்தந்தி 20 Feb 2022 11:40 PM IST (Updated: 20 Feb 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12.67 சதவீதம் வாக்குகள் ஊரக உள்ளாட்சி தேர்தலை விட குறைவாக பதிவாகி உள்ளன. தேர்தலில் 1,92,716 பேர் வாக்கு அளிக்கவில்லை.

வேலூர்

வேலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12.67 சதவீதம் வாக்குகள் ஊரக உள்ளாட்சி தேர்தலை விட குறைவாக பதிவாகி உள்ளன. தேர்தலில் 1,92,716 பேர் வாக்கு அளிக்கவில்லை.

1,92,716 பேர் வாக்கு அளிக்கவில்லை

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், ஒடுகத்தூர், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, திருவலம் பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 178 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் 1,87,883 ஆண் வாக்காளர்கள், 1,97,780 பெண் வாக்காளர்கள், 11 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தம் 3,85,674 வாக்காளர்கள் வாக்களித்தனர். ஆண்களை விட அதிகமாக 9,897 பெண்கள் வாக்கு செலுத்தி உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதிவாக்காளர் பட்டியலில் 178 வார்டுகளில் 2,78,156 ஆண் வாக்காளர்கள், 3,00,162 பெண் வாக்காளர்கள், 72 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தம் 5,78,390 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதில், 90,273 ஆண் வாக்காளர்கள், 1,02,382 பெண் வாக்காளர்கள், 61 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தம் 1,92,716 பேர் தேர்தலில் வாக்கு அளிக்கவில்லை.

66.68 சதவீதம் வாக்குப்பதிவு

வேலூர் மாநகராட்சியில் 65.5 சதவீதம், குடியாத்தம் நகராட்சியில் 67.35 சதவீதம், பேரணாம்பட்டு நகராட்சியில் 63.62 சதவீதம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் 78.78 சதவீதம், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 77.76 சதவீதம், பென்னாத்தூர் பேரூராட்சியில் 81.65 சதவீதம், திருவலம் பேரூராட்சியில் 80.07 சதவீதம் என்று 66.68 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக பென்னாத்தூர் பேரூராட்சியில் 81.65 சதவீதம் வாக்குகளும், குறைந்த அளவாக பேரணாம்பட்டு நகராட்சியில் 63.62 வாக்குகளும் பதிவாகி இருந்தது. 4 பேரூராட்சிகளையும் விட மாநகராட்சி, நகராட்சிகளில் குறைவான வாக்காளர்களே தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

12.67 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவு

வேலூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது. முதற்கட்டமாக நடந்த காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் 77.63 சதவீதம், 2-ம் கட்டமாக நடந்த வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 81.07 சதவீதம் என்று 79.35 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

வேலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை விட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12.67 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளன. இதன் மூலம் தேர்தலில் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்ற உணர்வு மற்றும் விழிப்புணர்வு கிராமப்புற மக்களை விட நகரத்தில் வசிக்கும் மக்களிடையே குறைவாக காணப்படுவது தெரிய வருகிறது.

Next Story