அரியலூர் நகராட்சி-பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி ‘சீல்' வைப்பு


அரியலூர் நகராட்சி-பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி ‘சீல் வைப்பு
x
தினத்தந்தி 21 Feb 2022 12:06 AM IST (Updated: 21 Feb 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட நகராட்சி- பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டன.

ஜெயங்கொண்டம், 
உள்ளாட்சி தேர்தல்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. அதன்படி அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளுக்கு 34 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 17,453 பேரும், ஜெயங்கொண்டத்தில் 21 வார்டுகளுக்கு, 38 வாக்குச்சாவடிகளில் 21,435 பேரும் வாக்களித்தனர்.
பேரூராட்சிகளில் உடையார்பாளையத்தில் 14 வார்டுகளுக்கு, 14 வாக்குச்சாவடிகளில் 7,779 பேரும், வரதராஜன்பேட்டையில் 15 வார்டுகளுக்கு, 15 வாக்குச்சாவடிகளில் 5,714 பேரும் வாக்களித்தனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 75.69 சதவீதம் வாக்குப்பதிவானது.
பூட்டி ‘சீல்’ வைப்பு
அரியலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 101 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடி அலுவலர்களால் ‘சீல்' வைக்கப்பட்டன. அரியலூர் நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள், அதன் வாக்கு எண்ணும் மையமான அரியலூர் நகராட்சி அலுவலகத்துக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள், அதன் வாக்கு எண்ணும் மையமான ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் லாரிகளில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.
அரியலூர் நகராட்சி வாக்குப்பதிவு எந்திரங்கள், நகராட்சியில் தனி பாதுகாப்பு அறைகளில் பாகம் வரிசையாக வாக்குப்பதிவு எந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டன. ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனித்தனி பாதுகாப்பு அறைகளில் பாகம் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகள் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டன.
தபால் வாக்குகள்
அரியலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி, முதலில் தபால் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் எண்ணப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.
போலீஸ் பாதுகாப்பு
மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார். வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story