வருமானத்திற்கு அதிகமாக ரூ.12 கோடி சொத்து சேர்த்த போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு
வருமானத்திற்கு அதிகமாக ரூ.12 கோடி சொத்து சேர்த்த போலீஸ்காரர், அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மும்பை,
வருமானத்திற்கு அதிகமாக ரூ.12 கோடி சொத்து சேர்த்த போலீஸ்காரர், அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களது 24 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.
போலீசில் புகார்
சாங்கிலியை சேர்ந்தவர் நாயக் சுரேஷ். இவர் கடந்த 1996-ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். இதன்பின்னர் பதவி உயர்வு பெற்று குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றினார். இதையடுத்து பயங்கரவாத எதிர்ப்பு படையில் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் 2018-ம் ஆண்டு சமூக ஆர்வலர் ஒருவர் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக புகார் அளித்தார். இந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ரூ.12 கோடி சொத்து
இதில், 2000- 2018-ம் ஆண்டுக்கு உட்பட்ட வருடங்களில் நாயக் சுரேஷ் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் ரூ.12 கோடியே 65 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்ததை கண்டறிந்தனர்.
இதில் சயான் பகுதியில் அடுக்குமாடி கட்டித்தில் 5 வீடுகள், நவிமும்பை கார்கரில் 3 மாடி பங்களா, சாங்கிலியில் சுமார் 20 ஏக்கர் நிலத்தில் திராட்சை மற்றும் மாம்பழ தோட்டம், இதைத்தவிர அவரது மனைவி லதாவின் தங்கநகைகள், விலையுர்ந்த கார்கள் போன்றவை அடங்கும். இது அவரது வருமானத்தை விட 1,512 சதவீதம் அதிகமாகும்.
வழக்கு பதிவு
மேலும் அவருக்கு 24 வங்கி கணக்குகள் இருப்பதும், இதில் கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்ததும் தெரியவந்தது. இந்த வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினர்.
விசாரணையின் உள்ளூர் கட்டுமான அதிபருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இந்த சொத்துகளை வாங்கியதாக தெரிகிறது.
இது தொடர்பான அறிக்கை கூடுதல் போலீஸ் கமிஷனர் லக்மி கவுதமிடம் சமர்பிக்கப்பட்டது.
இதையடுத்து துறை ரீதியான நடவடிக்கையாக போலீஸ்காரர் நாயக் சுரேஷ்சை உள்ளூர் ஆயுதப்படை பிரிவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் போலீஸ்காரர் நாயக் சுரேஷ், அவரது மனைவி லதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததற்காக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story