ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தொகையை பிடித்தம் செய்ய மறுக்க கூடாது


ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தொகையை பிடித்தம் செய்ய மறுக்க கூடாது
x
தினத்தந்தி 21 Feb 2022 12:46 AM IST (Updated: 21 Feb 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் ஆசிரியர்களின் ஊதியத்தில் ஆயுள் காப்பீட்டு பிரீமிய தொகையை பிடித்தம் செய்ய மறுக்க கூடாது என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்துகிறது.

கொரடாச்சோி:
திருவாரூர் மாவட்டத்தில் ஆசிரியர்களின் ஊதியத்தில் ஆயுள் காப்பீட்டு பிரீமிய தொகையை பிடித்தம் செய்ய மறுக்க கூடாது என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்துகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ந.ரெங்கராஜன் திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி மற்றும் வலங்கைமானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலுமாக களைதல் வேண்டும். உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு பின் அனுமதி வழங்க வேண்டும். அதற்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை தீர்க்க வேண்டும். இவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தி வருகிறோம். 
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு இந்த கோரிக்கைகளில் தீர்வு ஏற்படுத்த வேண்டும். சமீப காலமாக தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களை அவமதிக்கும் வகையில் கல்வித்துறை அதிகாரிகளின் போக்கு இருந்து வருகிறது. இதனால் ஆசிரியர்களிடத்தில் கொந்தளிப்பான மனநிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களின் சுயமரியாதையை பாதிக்காத வகையில் செயல்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியாளர்கள் ஆலோசனை வழங்க வேண்டும். 
காப்பீட்டு பிரீமியம் தொகையை
வலங்கைமான் ஒன்றியத்தில் ஆயுள் காப்பீட்டு பிரீமிய தொகைகளை ஊதியத்தில் இருந்து நேரடியாக பிடித்தம் செய்து செலுத்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் மறுப்பதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து மார்ச் 7-ந் தேதி வலங்கைமான் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அந்த வட்டாரக் கிளை முடிவு செய்திருக்கிறது. 
எனவே இதுகுறித்து உடனடியாக கலந்து பேசி காப்பீட்டு பிரீமியம் தொகை பிடித்தம் செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story