காவிரி டெல்டாவில் பருத்தி சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்
காவிரி டெல்டாவில் பருத்தி சாகுபடியில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே அதிக பலன் கிடைக்க வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரடாச்சேரி:
காவிரி டெல்டாவில் பருத்தி சாகுபடியில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே அதிக பலன் கிடைக்க வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
50 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி
நெல் அறுவடைக்குப்பின் விளைநிலத்தின் மண் வளத்தை பாதுகாக்கவும் பயிர் சுழற்சி முறையின் மூலமாக மண்ணிலுள்ள சத்துக்களை சமநிலைப்படுத்தி மண்வளத்தை மேம்படுத்த விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடி செய்வது வழக்கம். காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு பிறகு கோடைப்பயிராக பருத்தி. உளுந்து பயறு, எள், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யபடும். பருத்தியை பொறுத்தவரை குறைவான பரப்பிலேயே சாகுபடி செய்வர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வரை சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பிலேயே பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தன. இந்த ஆண்டு சாதகமான இயற்கை சூழல் நிலவுவதால் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பிற்கு மேல் பருத்தி சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த விலைக்கு...
இவ்வாறு சாகுபடி செய்யப்படும் பருத்திப் பஞ்சு தனியாரிடம் நேரடியாகவோ அல்லது அரசு வேளாண் விற்பனை நிலையங்கள் மூலமாக ஏஜென்சி நிறுவனங்களிடம் ஏலத்தின் மூலமோ விற்பனை செய்யப்படும். தனியாரும் ஏஜென்சி நிறுவனங்களும் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து பருத்தி விலையினை குறைத்து விடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறைந்த பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்ததால் மத்திய அரசின் இந்திய பருத்திக்கழக அதிகாரிகள் இங்கு வந்து பருத்தி கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பருத்திப பஞ்சினை குறைந்த விலைக்கே விற்பனை செய்யவேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இதுவே இந்த மாவட்டத்தில் பருத்தி சாகுபடி குறைவாக இருந்ததற்கு காரணமாகவும் உள்ளது.
நேரடியாக அரசு கொள்முதல்...
இந்த ஆண்டு பருத்தி சாகுபடி அதிகரித்துள்ள நிலையில் பருத்தி கொள்முதலை அரசே நேரடியாக செய்திட வேண்டும். மார்ச் மாதத்துடன் நெல் கொள்முதல் முடிந்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அந்த நிலையங்களை பருத்தி கொள்முதல் நிலையமாக மாற்றி அதன்மூலம் பருத்தி கொள்முதல் செய்து இந்திய பருத்தி கழகத்திற்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பருத்தி சாகுபடிக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வரை செலவு ஏற்படும் நிலையில் கூடுதல் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் பருத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பருத்தி சாகுபடியில் அதிக பலன்கள் கிடைக்கும் வகையில் வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உதவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story