‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சரியாக மூடப்படாத குழி
பவானி வர்ணபுரம் 5-வது வீதியில் தொலைபேசி துறை சார்பில் 7 இடங்களில் டெலிபோன் ஒயர் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன. ஒயர்கள் பதித்த பின்னர் அந்த குழிகள் மூடப்பட்டன. ஆனால் குழிகளை சரியாக மூடவில்லை. இதனால் குழி மேடும், பள்ளமுமாக காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சரியாக மூடப்படாத குழியை மூடுவதுடன், அந்த ரோட்டை சமனாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பவானி.
கால்நடைகளுக்கு தண்ணீர் வசதி
அந்தியூரில் கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு கொண்டுவரப்படும் கால்நடைகளுக்கு சந்தையில் உரிய தண்ணீர் வசதி இல்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் கால்நடைகளை கொண்டு வரும் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரு் வசதியை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணபதி, புதுப்பாளையம்.
புழுதி பறக்கும் ரோடு
ஈரோடு வில்லரசம்பட்டியில் இருந்து பெருந்துறை செல்லும் ரோடு குண்டும்- குழியுமாக உள்ளது. இதனால் அந்த ரோட்டில் மண்ணை போட்டு உள்ளார்கள். ஆனால் தார்ரோடு போடவில்லை. இதன்காரணமாக அந்த ரோட்டில் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கோ, ஈரோடு.
குண்டும்-குழியுமான சாலை
ஈரோடு எல்லைமாரியம்மன் கோவிலில் இருந்து பவானி செல்லும் சாலை குண்டும்- குழியுமாக உள்ளது. இதனால் அந்த ரோட்டில் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் குண்டும்- குழியுமான சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், ஈரோடு.
ஆபத்தான பள்ளம்
கோபி பாரியூர் ரோட்டில் உள்ள வளைவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம் காரணமாக அந்த ரோட்டில் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகிறார்கள். எனவே ஆபத்தான அந்த பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
கரும்புகையால் சுவாச பிரச்சினை
சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் அருகே பழையகளையனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடம் அருகே அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வார்டு குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. அந்த குப்பையில் அடிக்கடி தீ வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி கரும்புகை எழும்புகிறது. இதன்காரணமாக பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. மேலும் கண் எரிச்சலும் உண்டாகிறது. எனவே குப்பையில் தீ வைக்கப்படுவதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அரியப்பம்பாளையம்.
தடுப்புகள் அகற்றப்படுமா?
ஈரோடு சூளையில் இருந்து முதலிதோட்டம் செல்லும் வழியில் ஆபத்தான குழி உள்ளது. இதில் பலர் அடிக்கடி விழுந்து விடுவதால் அப்பகுதி பொதுமக்கள் அந்த குழியை சுற்றி ரோட்டின் நடுவில் வைக்கப்படும் தடுப்பு கல்லை வைத்து உள்ளார்கள். இதனால் அந்த ரோட்டில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே ஆபத்தான இந்த குழியை மூடவும், தடுப்பு கான்கிரீட்டுகளை அகற்றவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.?
சேகர், ஈரோடு.
Related Tags :
Next Story